ஹாங்காங்: ஹாங்காங்கின் ஊடகத்துறையின் பெரும்புள்ளியான ஜிம்மி லாய் (படம்) உட்பட 9 பேர் மீது அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடுக்கப்பட்டு அவர்கள் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது.
அந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியிடப்பட்டது. அதில், 2019ல் அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்பட்ட ஜனநாயக ஆதரவாளர்களின் ஆர்ப்பாட்டங்களின்போது சட்டவிரோதமான ஒன்றுகூடலில் ஈடுபட்டதற்காக திரு ஜிம்மி லாய்க்கு 14 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மற்ற ஒன்பது பேரும் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டதற்காகவும் மேலும் மூன்று பேர் அதே ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி நடந்த போராட்டத்தில் பங்குபெற்றதற்காகவும் தண்டனை விதிக்கப்பட்டது. திரு ஜிம்மி லாய், ஹாங்காங்கின் புகழ்பெற்ற 'ஆப்பிள் டெய்லி' நாளிதழின் நிறுவனராவார்.
இந்த வாரத் தொடக்கத்தில் திரு ஜிம்மி, சிறையில் இருந்து தன் கைப்பட எழுதியிருந்த கடிதம் ஒன்றை அவரது 'ஆப்பிள் டெய்லி' நாளிதழ் அப்படியே வெளியிட்டிருந்தது.
அதில், "நீதிக்காகப் போராடுவது செய்தியாளர்களாகிய நமது கடமை. நம்மீது இழைக்கப்படும் அநீதியைக் கண்டு கொள்ளாமல் இருக்காமலும், தீயவை நம்மைத் தீண்டுவதற்கு இடம் கொடுக்காமலும் இருப்பதன் மூலம் நாம் நமது பொறுப்பை நிறைவேற்றுகிறோம்," என்று கூறியுள்ளார்.

