செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
d6e01684-28df-44c2-8e1f-a601fbd827a1
-

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு:

8 பேர் பலி; பலர் காயம்

இண்டியனாபொலிஸ்: அமெரிக்காவின் இண்டியனாபொலிஸ் மாநிலத்தில் நேற்று அடையாளம் தெரியாத ஒருவரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 8 பேர் பலியானதோடு பலர் கடுமையான காயங்களுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவன் தன்னையும் சுட்டுக்கொண்டு உயிரிழந்தான்.

இண்டியனாபொலிஸ் அனைத்துலக விமான நிலையத்திற்கு அருகேயுள்ள ஃபெட்எக்ஸ் நிலையத்தில் உள்ளூர் நேரப்படி இரவு 11 மணிக்கு இந்தக் கொடூரச் சம்பவம் நடந்ததாக அந்த வட்டார போலிஸ் தெரிவித்தது.

முதற்கட்ட விசாரணையில் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் துப்பாக்கிக்காரன் சம்பவ இடத்தில் மாண்டான் என்றும் சமூகத்திற்கு இனி எவ்வித அச்சுறுத்தலும் இல்லையென இண்டியனா போலிஸ் பேச்சாளர் ஜெனே குக் தெரிவித்தார். கடுமையான காயமடைந்த நான்கு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஒருவர் கவலைக்கிடமாக உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டனர் என்று அந்தப் பேச்சாளர் தெரிவித்தார்.

கூகள் நிறுவனத்தின் மீது

ஆஸ்திரேலியா குற்றச்சாட்டு

கேன்பெரா: கூகள் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களிடம் இருந்து ஆண்ட்ராய்ட் கைத்தொலைபேசி கருவிகளின் வழி தரவுகளைப் பெறுகிறது. இதன் மூலம் அந்நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களைத் தவறாக வழி நடத்துகிறது என்று வாடிக்கையாளர் ஒழுங்குமுறை ஆணையம் ஆஸ்திரேலிய மத்திய நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அண்மையில் ஆஸ்திரேலியா, அங்குள்ள செய்தித்தாள் ஊடகங்களில் இருந்து ஃபேஸ்புக், கூகள் போன்ற சமூக ஊடகங்களால் கையாளப்படும் செய்திகளுக்கு அந்நிறுவனங்கள் அங்குள்ள ஊடக நிறுவனங்களுக்குக் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்தியது.

இந்நிலையில், கூகள், தனது ஆண்ட்ராய்ட் மென்பொருளின் மூலம் பயனீட்டாளர்களின் தரவுகளை அனுமதியின்றி பெற்று வருகிறது. தங்கள் கைத்தொலைபேசியில் 'வெப் அண்ட் அப்ளிகேஷன்' (Web and App) இயக்கத்தில் இருக்கும் பயனீட்டாளர்களின் தரவுகளை கூகள் நிறுவனத்தால் பெறமுடியும் என்று ஏசிசிசி என்றழைக்கப்படும் ஆஸ்திரேலியா போட்டித்திறன் மற்றும் வாடிக்கையாளர் ஒழுங்குமுறை ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.