பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு மிதமான அறிகுறிகளே தென்படுவதாகக் குறிப்பிட்ட சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா, தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு கொவிட்-19 தொற்று ஏற்படக்கூடும் என எச்சரித்தார்.
முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட 40 சுகாதாரத்துறை ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார். அவற்றுள் 9 பேருக்கு, தடுப்பூசி போட்டு, இரு வாரங்களுக்குப் பிறகு தொற்று ஏற்பட்டதாகவும் 31 பேருக்கு தடுப்பூசி போட்ட இரு வாரங்களுக்குள்ளாக தொற்று ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
முதல் தடுப்பூசி மட்டுமே போட்டுக்கொண்ட 142 சுகாதாரப் பணியாளர்களுக்கு கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் தமது ஃபேஸ்புக் பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
கொரோனா தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்படுவது, இறப்பு நிகழ்வது போன்றவற்றிலிருந்து இந்தத் தடுப்பூசிகள் பாதுகாப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக்கொண்ட 14 நாட்களுக்குப் பிறகே அதிகபட்ச நோய் எதிர்ப்பு சக்தி படிப்படியாக உருவாகும் என்று குறிப்பிட்ட டாக்டர் ஹிஷாம், தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் பாதுகாப்பு நடைமுறைகளைக் கைவிடக்கூடாது என்றார்.
பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டது. நாளை முதல் வயதானவர்களுக்கும் உடல்நலப் பிரச்சினைகள், உடற்குறை உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கவுள்ளது. அடுத்த மாதம் மற்றவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும்.

