மணிலா: பிலிப்பீன்சின் பலாவான் மாகாணத்தின் மேற்குப் பகுதியில் கடலோரக் காவல்படை அதிகாரிகள் நேற்று முன்தினம் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் உலகின் ஆகப் பெரிய சிப்பிகள் 200 டன் அளவுக்கு பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மொத்த மதிப்பு $33 மில்லியன் என மதிப்பிடப்படுகிறது. இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகளில் ஆக அதிகமான மதிப்புடைய சிப்பிகள் இப்போது கிடைத்திருப்பதாகக் கூறப்பட்டது. யானைத் தந்தங்களுக்குப் பதிலாக இந்தச் சிப்பிகள் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.
பல கடல்வாழ் உயிரினங்களுக்கு உணவாகும் கடல் பாசி படரும் இடமாக இந்த சிப்பிகள் இருக்கின்றன. உலகின் ஆகப் பெரிய சிப்பி வகைகளான டிரிடாக்னா வகை உட்பட பலவிதமான சிப்பிகள் சட்டவிரோதமாக இவ்வாறு கடலிலிருந்து வெளியில் எடுத்துவரப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த வகை சிப்பிகள் 1.3 மீட்டர் அகலம் வரை 250 கிலோ கிராம் வரையிலான எடை அளவுக்கு வளரக்கூடியவை. அருகி வரும் சிப்பிகளாக இவை கருதப்படுகின்றன. அந்த நாட்டின் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ், இத்தகைய அருகிவரும் உயிரினங்களைக் கொல்வோருக்கு 12 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, ஒரு மில்லியன் பெசோ ($27,600) வரை அபராதம் விதிக்கப்படலாம்.

