செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
06ce26d2-91b8-485a-9d18-561fc53aa7b0
-

ஆசியான் மாநாட்டில் மியன்மார் ராணுவத் தலைவர் பங்கேற்பு

பேங்காக்: மியன்மாரின் ராணுவத் தலைவர் ஜெனரல் மின் அவுங் லயிங் கடுத்த வாரம் நடைபெற உள்ள தென்கிழக்கு ஆசியத் தலைவர்கள் பங்கேற்கும் சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்பார் என தாய்லாந்து நாட்டின் வெளியுறவு அமைச்சு நேற்று தெரிவித்தது. ஜகார்த்தாவில் வரும் 24ஆம் தேதி நடைபெறவுள்ள அந்த ஆசியான் கூட்டத்தில் மியன்மாரை ராணுவம் கைப்பற்றியதற்குப் பிறகு அங்கு நிலவும் நெருக்கடி குறித்து விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. நாட்டில் ஜனநாயகத்தை மீண்டும் நிலை நிறுத்தக்கோரி பலரும் வீதிகளில் இறங்கி போராடி வரும் வேளையில், அங்கு 700க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருப்பதாக கண்காணிப்புக் குழு ஒன்று தெரிவித்துள்ளது. ஆசியான் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மியன்மாரின் நெருக்கடிநிலைக்கு மாநாட்டில் தீர்வு காண முடியும் எனக் கருதப்படும் நிலையில், ராணுவத் தலைவரை மாநாட்டில் பங்கேற்க விடக்கூடாது என மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நேற்று தெரிவித்தனர்.

அனைத்துலக விண்வெளி நிலையத்திலிருந்து திரும்பிய 3 வீரர்கள்

அல்மாட்டி: ரஷ்யாவைச் சேர்ந்த இருவர், நாசா விண்வெளி ஆய்வுக்கூடத்தைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் மூன்று விண்வெளி வீரர்கள் நேற்று கஸக்ஸ்தானில் உள்ள ஸெஸ்காகான் நகருக்கு 150 கி.மீட்டர் தென்கிழக்கில் உள்ள வெற்று நிலத்தில் தரையிறங்கினர். அரை ஆண்டுக் காலம் விண்வெளி நிலையத்தில் செயல்பாடு ஒன்றில் அவர்கள் ஈடுபட்டிருந்தனர். ரய்ஸிகோவ், குட்-ஸ்வெர்ச்சோவ் ஆகிய இருவரும் ரஷ்ய வீரர்கள். டாக்டர் கேட் ரூபின்ஸ் நாசாவைச் சேர்ந்தவர். திரு குட்-ஸ்வெர்ச்சோவுக்கு இது முதல் பயணம். மற்ற இருவருக்கும் இது இரண்டாவது பயணம்.