இளவரசர் பிலிப்புக்கு பிரியாவிடை
லண்டன்: இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் இங்கிலாந்து அரச குடும்பத்தில் மிக நீண்ட நாள் அரச பதவியில் இருந்தவருமான இளவரசர் பிலிப்புக்கு அரச குடும்பம் கண்ணீருடன் பிரியாவிடை கொடுத்தது. இளவரசர் பிலிப் இம்மாதம் 9ஆம் தேதி வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார்.
வின்ட்சர் கோட்டையின் தனி தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த இளவரசர் பிலிப்பின் உடல், இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ராணுவத்தினர் துப்பாக்கி குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் மதச்சடங்குகள் முடிந்த பிறகு உள்ளூர் நேரப்படி சரியாக மாலை 3 மணிக்கு நாடு முழுவதும் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதன் பின்னர் இளவரசர் பிலிப் உடல், தேவாலயத்தில் உள்ள கல்லறைப் பகுதியான ராயல் வால்ட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
'ஆஸ்திரேலியா அவசரப்படாது'
மெல்பெர்ன்: ஆஸ்திரேலியாவில் ஏறக்குறைய கொவிட்-19 ஒடுங்கிவிட்டது. என்றாலும் அனைத்துலக எல்லைகளைத் திறப்பதில் ஆஸ்திரேலியா அவசரப்படாது என்று அந்த நாட்டின் பிரதமர் ஸ்கூட் மோரிசன் நேற்று தொலைக்காட்சி யில் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியா, குடிமக்கள் அல்லாத, நிரந்தரவாசிகள் அல்லாத அனைவருக்கும் 2020 மார்ச்சில் தனது எல்லைகளை மூடியது. அண்மைய மாதங்களாக வரம்புக்கு உட்பட்ட அனைத்துலக பயணிகளே, குறிப்பாக நாடு திரும்பும் குடிமக்களே அனுமதிக்கப்படுகிறார்கள்.
'மேலும் ஃபைசர் தடுப்பூசி'
தோக்கியோ: ஜப்பானுக்கு மேலும் தடுப்பூசியை வழங்கவேண்டும் என்று ஜப்பானிய பிரதமர் சுகா விடுத்த கோரிக்கையை ஃபைசர் நிறுவனத்தின் நிர்வாகி ஆல்பர்ட் பொர்லா ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜப்பானின் தடுப்பூசித் துறை அமைச்சர் டாரா கோனோ ஃபுஜி தொலைக் காட்சியில் தெரிவித்தார்.
ஜப்பானில் ஃபைசர்-பயோஎன்டெக் ஊசி மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. 18 வயதுக்கும் அதிக வயதுள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடவேண்டும் என்ற குறிக்கோளுடன் கூடிய ஜப்பான், வரும் செப்டம்பருக்குள் போதிய மருந்து கைவசம் இருக்கும் என்று நம்புகிறது.
மியன்மார் ஐக்கிய அரசு கோரிக்கை
யங்கூன்: மியன்மாரில் சென்ற வாரத்தில் அமைக்கப்பட்ட தேசிய ஐக்கிய அரசாங்கம், மியன்மாரின் ராணுவ ஆட் சியை ஆசியான் அங்கீகரிக்கக்கூடாது என்று கோரியது.
அந்த நாட்டில் பிப்ரவரி 1ஆம் தேதி நடந்த ராணுவப் புரட்சியை அடுத்து ஏற்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு ஏற்பட வேண்டும் என்று பக்கத்து நாடுகள் விரும்பினால் அவை புதிய ஐக்கிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஐக்கிய அரசின் துணை வெளியுறவு அமைச்சர் மாவ் ஸாவ் ஓ கூறினார்.
இதனிடையே, புத்தாண்டையொட்டி சனிக்கிழமை 23,000 பேருக்கும் மேற்பட்ட கைதிகளை ராணுவ ஆட்சி விடுதலை செய்ததாகவும் இந்த மாதப் பிற்பகுதியில் நடக்கும் ஆசியான் கூட்டத்தில் தான் கலந்துகொள்ளப் போவதாக ராணுவப் புரட்சித் தலைவர் உறுதிப்படுத்தி இருக்கிறார் என்றும் தகவல்கள் தெரிவித்தன.

