கும்பமேளாவில் கலந்துகொண்ட கொவிட்-19 நோயாளிகள் 20 பேர் மருத்துவமனையிலிருந்து தப்பியோட்டம்

கும்பமேளாவில் கலந்துகொண்ட கொவிட்-19 நோயாளிகள் 20 பேர் மருத்துவமனையிலிருந்து தப்பியோட்டம்

1 mins read
711573f3-d65d-427f-ace4-960df50aa8bf
தப்பியோடிய நோயாளிகள் மீது பேரிடர் மேலாண்மை மற்றும் தொற்றுநோய்கள் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களை தேடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. படம்: இந்திய ஊடகம் -

இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலம், தெஹ்ரி நரேந்திர நகரில் உள்ள மருத்துவமனையிலிருந்து 20 நோயாளிகள் தப்பி ஓடிவிட்டதாக அந்த மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொவிட்-19 தொற்றிய அந்த நோயாளிகள் கும்பமேளாவில் கலந்துகொண்டவர்கள்.

மருத்துவமனையில் அன்றாடம் நடத்தப்படும் வழக்கமான சோதனைக்காக நேற்று முன்தினம் (ஏப்ரல் 17) படுக்கைப் பிரிவுகளை மருத்துவர்கள் பார்வையிட்டபோது நோயாளிகள் தப்பிவிட்டது வெளிச்சத்துக்கு வந்தது என்று அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் நிராஜ் ராய் தெரிவித்தார்.

அந்தப் படுக்கைப் பிரிவில் 38 பேர் சிகிச்சை பெற்று வந்ததாகவும் அவர்களில் 20 பேர் தப்பிவிட்டதாகவும் தலைமை மருத்துவ அதிகாரி சுமன் ஆர்யா தெரிவித்தார்.

தப்பிச் சென்றவர்களில் இருவர் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், மீதமுள்ளவர்களில் எழுவர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள். மேலும் உத்தரப்பிரதேசம், ஹரியானா, ஒடிசா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தலா நான்கு பேரைக் காணவில்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

தப்பியோடிய நோயாளிகள் மீது பேரிடர் மேலாண்மை மற்றும் தொற்றுநோய்கள் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களை தேடும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக நரேந்திர நகரைச் சேர்ந்த போலிஸ் அதிகாரி சாந்தி பிரசாத் திம்ரி தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்