இரு தரப்பு பயணம் தொடக்கம்; 400 நாட்களுக்குப் பிறகு சந்திப்பு
சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையில் இரு தரப்பு பயணம் தொடங்கியுள்ளது.
குடும்பத்தினரும் நண்பர்களும் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லாமல் மிகவும் ஊக்கத்துடன், மன எழுச்சியுடன், நெடுநாட்களுக்குப் பிறகு முதன்முதலாகச் சந்தித்து கட்டித் தழுவி ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.
சிட்னியிலிருந்து நியூசிலாந்துக்கு விமானத்தில் புறப்பட்ட பலரும் விவரிக்க முடியாத அளவுக்குப் பரபரப்புடன் காணப்பட்டனர்.
கொவிட்-19 காரணமாக தங் களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய தேவை இல்லாமல் ஏறக்குறைய 400 நாட்களில் முதன்முறையாக இரு நாடுகளுக்கும் இடையில் மக்கள் பயணம் செய்ய இப்போது வசதி ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் ஓராண்டுக்கு முன் குடிமக்கள், நிரந்தரவாசிகள் அல்லாதோருக்கு எல்லைகளை மூடிவிட்டன. அந்த நாடுகளில் கொவிட்-19 தொற்று குறைந்து இருக்கிறது.
இப்போது எல்லைகள் திறக்கப்பட்டு இருப்பதால் ஆயிரக்கணக்கான குடும்பத்தினரும் நண்பர்களும் ஒருவரை ஒருவர் சந்தித்து மகிழ முடியும். பொருளியல் மீட்சிக்கு இந்த ஏற்பாடு உதவும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்கோட் மோரிசனும் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெனும் கூட்டறிக்கையில் கூறினர். திரு மோரிசன் விரைவில் நியூசிலாந்து வருவார் என்றார் பிரதமர் ஜெசிந்தா.

