செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
ebc50c27-448e-4dac-8c45-651599671433
-

மியன்மாரில் ஜப்பானிய

செய்தியாளர் தடுத்துவைப்பு

யங்கூன்: மியன்மார் அதிகாரிகள், யூக்கி கிட்டாசிமி என்ற ஜப்பானிய செய்தியாளரைக் கைது செய்து இருப்பதாக நேற்று தகவல்கள் தெரிவித்தன.

அந்தச் செய்தியாளரை யங்கூனில் இருக்கும் அவருடைய வீட்டிற்குச் சென்று ராணுவத் துருப்பினர் பிடித்துச் சென்றதாக நேரே பார்த்தவர்கள் கூறியதாக பிபிசி பர்மா செய்தி நிறுவனம் தெரிவித்தது.

இதன் தொடர்பில் ஜப்பானிய தூதரகம், மியன்மார் ராணுவ நிர்வாகம் இரண்டிடமிருந்தும் தகவல் எதையும் பெற முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆசிய பங்குகள் ஏறுமுகம்

ஹாங்காங்: கொவிட்-19 காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்ட அமெரிக்காவின் பொருளியல் மீட்சி கண்டு வருகிறது என்ற நம்பிக்கை காரணமாக அமெரிக்கப் பங்குச் சந்தை புதிய ஊக்கத்தைப் பெற்றது. சென்ற வார முடிவில் பங்கு விலைகள் அதிகரித்தன.

அதன் விளைவாக நேற்று ஆசிய சந்தைகள் ஏறுமுகமாக இருந்தன. சீனாவின் ஹாங்காங், ஷங்காய் சந்தைகளும் தோக்கியோ சந்தையும் சிட்னி, தைப்பே, சோல் சந்தைகளும் உயர்ந்தன என்று தகவல்கள் தெரிவித்தன.

சீனா: டாலருக்குப் பதில்

யுவான் திட்டம் இல்லை

பெய்ஜிங்: உலகின் பிரதான பரிவர்த்தனை காப்புநிதி நாணயமாக இருக்கின்ற அமெரிக்க டாலரை அகற்றிவிட்டு அந்த இடத்தில் தன் யுவான் நாணயத்தைச் சீனா இடம்பெறச் செய்யப்போகிறது என்ற அச்சம் தேவையில்லை என்று பெய்ஜிங் தெரிவித்துள்ளது.

சீனா தனது யுவான் நாணயத்தை அனைத்துலக மயமாக்க பெருமுயற்சிகளை எடுத்து வருகிறது. ஆனால் அமெரிக்க டாலருக்குப் பதிலாக யுவானை ஆக்குவது சீனாவின் விருப்பம் அல்ல என்று சீன மக்கள் வங்கியின் துணை ஆளுநர் லி போ தெரிவித்தார். மின்னிலக்க யுவான் நாணயத்தை உருவாக்கவும் சீனா முயன்று வரு கிறது என்றாலும் இந்த முயற்சிகள் எல்லாம் உள்நாட்டுப் புழக்கத்தை நோக்கமாகக் கொண்டவை என்றார் அவர்.

11 போலிஸ்காரர்கள் விடுவிப்பு

லாகூர்: பாகிஸ்தானுக்கான பிரான்ஸ் நாட்டுத் தூதரை பாகிஸ்தானில் இருந்து வெளியேற்றவேண்டும் என்று கோரி வன்செயல் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

தெஹ்ரிக்-இ-லப்பைக் என்ற தடை செய்யப்பட்ட தீவிர வாத அமைப்பின் ஆதரவாளர்கள் 11 போலிஸ் அதிகாரி களை ஞாயிற்றுக்கிழமை பிடித்து வைத்துக்கொண்டனர்.

என்றாலும் அரசாங்கம் நடத்திய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து அந்த அதிகாரிகள் விடுவிக்கப்பட்டதாக நேற்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷித் அறிவித்தார்.

லூசியானா துப்பாக்கிச்

சூட்டில் ஐந்து பேர் காயம்

லூசியானா: அமெரிக்காவின் லூசியானாவில் ஷிரிவ்போர்ட் என்ற நகரில் இருக்கும் மதுபானக் கடை ஒன்றில் வாகனத்தில் வந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் ஐந்து பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தாக தொலைக்காட்சி செய்திகள் தெரிவித்தன.

தாக்குதலுக்குக் காரணம் தெரியவில்லை என்றும் வெள்ளி நிற ஃபோர்டு காரை தாங்கள் தேடுவதாகவும் போலிஸ் அதிகாரிகள் கூறினர். அமெரிக்காவில் அண்மைய வாரங்களில் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் அதிகரித்துவிட்டன. துப்பாக்கிக் கட்டுப்பாடுகள் தொடர்பில் புதிய விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.