கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் ஒருவர் வெளிநாட்டு ஊழியர்

கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் ஒருவர் வெளிநாட்டு ஊழியர்

2 mins read
4b5f2eb5-165f-4d06-86c1-ab61ef9b1a94
இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் ஒருவர் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிவாசி படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் இன்று மேலும் 14 புதிய கொரோனா தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியதையும் சேர்த்து இங்கு மொத்தம் 60,865 பேர் கொவிட்-19 பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் ஒருவர் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிவாசி. உள்ளூர் சமூகத்தில் யாருக்கும் தொற்று பதிவாகவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்தது.

கிருமித்தொற்று பதிவு செய்யப்பட்ட மற்ற 13 பேரும் வெளிநாடுகளிலிருந்து வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட்டவர்கள். நேற்று உள்ளூர் சமூகத்தில் 44 வயது உணவக மேலாளருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

சிங்கப்பூர் நிரந்தரவாசியான அவர் தஞ்சோங் பகாரில் இருக்கும் ஸ்பைஸ் கிரில் உணவகம், சிராங்கூனில் இருக்கும் ரங்கூன் பார் & பிஸ்ட்ரோ ஆகியவற்றை நிர்வகித்து வருகிறார். கடந்த வியாழக்கிழமை அவர் வேலைக்குச் சென்றிருந்தார். அவரது மனைவியான 41 வயது கணக்காளருக்கு கடந்த வெள்ளிக்கிழமை கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.

கடந்த 2ஆம் தேதி இந்தியாவிலிருந்து இங்கு வேலை அனுமதிச் சீட்டுடன் வந்த ஒருவருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரிடமிருந்து அந்த கணக்காளருக்கு தொற்று பரவியிருக்கலம் என்று கூறப்பட்டது.

அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் என்ற முறையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அந்த உணவக மேலாளருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருடைய சக ஊழியர்கள் உட்பட நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் உள்ளூர் சமூகத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் அது இரண்டாக இருந்தது. தொடர்புகள் தடம் அறியப்படாத உள்ளூர் தொற்றுச் சம்பவங்களும் கடந்த வாரத்தில் ஐந்தாக உயர்ந்துள்ளன. அதற்கு முந்தைய வாரத்தில் அந்த எண்ணிக்கை இரண்டாக இருந்தது.

வெளிநாடுகளிலிருந்து இங்கு திரும்பிய பிறகு 19 பேருக்கு கிருமி தொற்றியது நேற்று முன்தினம் உறுதிப்படுத்தப்பட்டது.