லண்டன்: இளையர்களுக்குக் காற்பந்து விளையாட்டில் ஈடுபாடு குறைந்து வருவதால் காற்பந்தைக் காப்பாற்றுவதற்காக ஐரோப்பிய சூப்பர் லீக் தொடங்கும் முடிவு எடுக்கப்பட்டது என்று ஸ்பானிய காற்பந்து லீக்கின் முன்னணி குழுக்களில் ஒன்றான ரியால் மட்ரிட் குழுத் தலைவர் ஃபுளோரென்டினோ பெரஸ் கூறியுள்ளார்.
ஐரோப்பாவில் உள்ள அனைத்து முன்னணி அணிகளும் சேர்ந்து அவர்களுக்கென அமைக்கப்படும் ஒரு லீக் போட்டிதான் ஐரோப்பிய சூப்பர் லீக்.
இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட், லிவர்பூல், மான்செஸ்டர் சிட்டி, ஆர்சனல், டாட்டன்ஹாம், செல்சீ ஆகிய குழுக்களும் ஸ்பெயினின் அட்லெட்டிக்கோ மட்ரிட், ரியால் மட்ரிட், பார்சிலோனா ஆகிய குழுக்களும் இத்தாலியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ இடம்பெறும் யுவெண்டெஸ், ஏசி மிலான், இண்டர் மிலான் ஆகிய குழுக்களும் இந்த புதிய லீக்கில் விளையாட விண்ணப்பித்துள்ளன.
இந்த பிரத்தியேக லீக் உருவாக்கப்பட்டு, குழுக்கள் முதலில் 'ரவுண்ட் ராபின்' முறையில் விளையாடி அதன்பின் தகுதிச் சுற்று, காலிறுதி, அரையிறுதி, இறுதிச் சுற்று ஆகியவற்றில் விளையாடும் என்று திட்டமிடப்பட்டது. கிட்டத்தட்ட இந்தியாவில் விளையாடப்படும் ஐபிஎல், ஐஎஸ்எல் லீக் போட்டிகளைப் போல இந்த லீக் அமையும். எனினும் இதற்கு எதிராக பல சர்ச்சையும் அதிருப்தியும் குறிப்பாக ரசிகர்களிடையே எழுந்துள்ளன.
இதைப்போன்று பெரிய அணிகளை வைத்துப் போட்டி நடத்தும் பட்சத்தில் சிறிய அணிகள் கடுமையாக பாதிக்கும் என்று பலர் எண்ணுகின்றனர்.
மேலும், இதைப்போன்று ஒரு போட்டி நடைபெறும் பட்சத்தில் சிறிய நாடுகளில் இருக்கும் அணிகள் இடம்பெற வாய்ப்புகள் இல்லை என்பதால் இது காற்பந்து ஆட்டத்தை மேலும் வளர விடாது என கருத்துகள் நிலவுகின்றன்.
இதற்கிடையே தற்போது முன்னணி ஐரோப்பிய குழுக்களைக் கொண்டு விளையாடப்படும் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக்கையும் யுரோப்பா லீக்கையும் நடத்தும் யுயேஃபா அமைப்பு இந்த புதிய ஐரோப்பிய சூப்பர் லீக்கைத் தடுத்து நிறுத்தும் பொருட்டு கிட்டத்தட்ட $9.6 பில்லியன் நிதியைத் திரட்டிக்கொண்டிருக்கிறது என ஊடகங்கள் தெரிவித்தன.

