மலேசிய மாநிலங்கள் தடுப்பூசிகளை வாங்க அனுமதி

மலேசிய மாநிலங்கள் தடுப்பூசிகளை வாங்க அனுமதி

2 mins read
283dfb90-ad12-4eb5-ac46-34421a4041d1
மலேசியாவில் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இருப்பினும் நாட்டின் 33 மில்லியன் மக்கள் தொகையில் மூன்று விழுக்காட்டு மக்களுக்கு மட்டுமே குறைந்தபட்சம், முதல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. படம்: AFP -

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கொவிட்-19 தடுப்பூசிகளை மாநில அரசுகள் இனி வாங்கலாம் என்று மலேசிய கொவிட் தடுப்பூசி நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்கும் அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.

மாநில அரசுகள் தடுப்பூசிகளை தன்னிச்சையாக வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்திருந்தன. அத்துடன் அங்கு தடுப்பூசி விநியோகத்திற்கு இடையூறு ஏதும் ஏற்படாத வகையில் மாநிலங்களுக்குச் சாதகமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கைரி தெரிவித்துள்ளார்.

சிலாங்கூர் மற்றும் சரவாக் மாநில அரசுகள் தன்னிச்சையாக தடுப்பூசி மருந்துகளைப் பெறுவதற்கான அனுமதி கிடைப்பது தாமதமாகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகிம், கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 20) கூறியிருந்தார். அதனையடுத்து அமைச்சரின் அறிவிப்பு வெளியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

மலேசியாவில் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இருப்பினும் நாட்டின் 33 மில்லியன் மக்கள் தொகையில் மூன்று விழுக்காட்டு மக்களுக்கு மட்டுமே குறைந்தபட்சம், முதல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அங்கு, வரும் ஜூன் மாதம் தடுப்பூசி விநியோகம் துரிதப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டின் மக்கள் தொகையில் 80 விழுக்காட்டினருக்குத் தடுப்பூசி போடுவதற்கு அந்நாடு இலக்கு கொண்டுள்ளது.

"சிலாங்கூர் முதல் அமைச்சருடன் நடத்தப்பட்ட உரையாடலில், அவர், தன்னிச்சையாக தடுப்பூசி வாங்கும் திட்டத்தைத் தெரிவித்தார். நான் அதற்குச் சாதகமான முறையில் பதிலளித்தேன். ஆனால், இதுவரையில், அந்த மாநிலம் தன்னிச்சையாக தடுப்பூசி வாங்குவதற்கு அதிகாரபூர்வமாக எந்தவொரு கடிதத்தையும் எனக்கு அனுப்பவில்லை," என்று அமைச்சர் கைரி கூறினார்.

மேலும் திரு கைரி ஓர் அறிக்கையில். தான் சரவாக் துணை முதல்வர் அமர் டக்ளஸ் உக்கா எம்பாஸிடம் இது குறித்து பல முறை பேசியிருக்கிறேன். அப்போது மத்திய அரசாங்கத்தின் தடுப்பூசி விநியோகம் சரவாக் மாநிலத்திற்குப் போதுமானதாக இருக்கும் என்று எடுத்துக் கூறியதாகத் தெரிவித்துள்ளார். இருப்பினும் சரவாக் துணை முதல்வர் தன்னிச்சையாக தடுப்பூசி மருந்துகளைப் பெறும் விருப்பத்தை முன்வைத்தார்.

சரவாக் அரசின் விருப்பத்திற்கேற்ப தன்னிச்சையாக தடுப்பூசி மருந்துகளை வாங்கலாம். தேசிய மருந்தக ஒழுங்கு ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற தடுப்பூசி மருந்துகளையே வாங்க முடியும் என்று பதிலளித்ததாக திரு கைரி கூறினார்.