தோக்கியோ: ஜப்பானின் தோக்கியோ, ஒசாகா, கியோட்டோ வட்டாரங்களில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அப்பகுதிகளில் அவசரநிலையை அறிவிக்க ஜப்பான் பரிசீலித்து வருவதாக அந்நாட்டின் 'என்எச்கே' தொலைக்காட்சி நேற்று தெரிவித்தது.
அதிவேகமாக தொற்றக்கூடிய புதுவகை கொவிட்-19 கிருமியால் புதிதாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, இந்த வாரத்திற்குள் ஜப்பானின் தலைநகர் தோக்கியோவிலும், இரண்டாவது பெரிய நகரமான ஒசாகாவிலும் மற்றும் ஹியோகோ, கியோட்டோ வட்டாரங்களில் அவசரநிலை அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பானில் இதுவரையிலும் 540,000 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9,707 கொவிட்-19 மரணம் பதிவாகியுள்ளது.
தோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தொடங்க இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில் அங்கு தொற்று அதிகரிப்பு மேலும் அச்சத்தைத் தந்துள்ளது.
ஜப்பானில் ஏப்ரல் 29 முதல் மே 9ஆம் தேதி வரை ஆண்டுதோறும் பொன் வாரமாகக் கொண்டாடப்படும். இந்தக் காலக்கட்டத்தில் மக்கள் நடமாட்டம் அதிகரித்தால் தொற்று மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால் அப்போது அவசரநிலை அறிவிக்கப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒசாகா வட்டாரத்தில் ஏற்பட்டுள்ள நான்காவது தொற்று அலையைக் கட்டுப்படுத்த ஏற்கெனவே முடிவுசெய்யப்பட்டுள்ள பெரிய நிகழ்ச்சிகளை ஒத்திவைப்பதன் மூலம் மக்களின் நடமாட்டத்தைக் குறைக்க அதிகாரிகள் திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது.
ஜப்பானின் தலைநகர் தோக்கியோ, ஒசாகா உள்ளிட்ட 40 மாகாணங்களில் 10 மாகாணங்களில் ஏற்கெனவே பாதி அவசரநிலை நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
அரசாங்கத்தின் உயர்மட்ட பேச்சாளர் கர்சுனோபு கட்டோ, மாகாணங்களில் அவசரநிலை அறிவிக்க அனுமதி கோரப்பட்டால் அந்தக் கோரிக்கைகள் உடனுக்குடன் பரிசீலிக்கப்படும் என்ற அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து தெரிவித்தார்.
இந்நிலையில் ஜப்பான், ஃபைசர் நிறுவனத்துடன் 50 மில்லியன் தடுப்பூசி மருந்துகளுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளது. அந்த மருந்துகள் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் ஜப்பானுக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்நாட்டின் நிக்கெய் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா, கடந்த சனிக்கிழமை, அமெரிக்காவுக்குச் சென்றிருந்தபோது மேலும் அதிகமான ஃபைசர் தடுப்பூசி மருந்துகளை வாங்குவது குறித்து ஃபைசர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
தடுப்பூசி மருந்து பற்றாக்குறை ஏற்படாத வகையில், மொடர்னா தடுப்பூசி பயன்படுத்துவது குறித்தும் ஜப்பானின் ஒழுங்குமுறை ஆணையம் சோதனையில் ஈடுபட்டு வருகிறது.

