பிராணவாயு கசிவு; மருத்துவமனையில் 22 பேர் மரணம்

பிராணவாயு கசிவு; மருத்துவமனையில் 22 பேர் மரணம்

1 mins read
69482e65-6432-48a0-87da-c244cc83f696
நாசிக் நகரில் உள்ள மருத்துவமனைக்கு பிராணவாயு விநியோகிக்கப்பட்டபோது கசிவு ஏற்பட்டதால் கிட்டத்தட்ட அரை மணி நேரத்துக்கு பிராணவாயு விநியோகம் தடைபட்டது. இதன் காரணமாக 22 பேர் மாண்டனர். படம்: ராய்ட்டர்ஸ் -

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக் நகரில் பிராணவாயு விநியோகிக்கும் லாரியிலிருந்து ஸாகிர் உசேன் மருத்துவமனையின் சிலிண்டருக்கு பிராணவாயுவை மாற்றும் பணி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது கசிவு ஏற்பட்டதில் 22 பேர் உயிர் இழந்தனர்.

பிராணவாயு கசிவின் காரணமாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்ற நோயாளிகளுக்கான பிராணவாயு விநியோகம் ஏறத்தாழ அரை மணி நேரத்துக்குத் தடைபட்டதாக என்டிடிவி செய்தி நிறுவனத்திடம் மாவட்ட ஆட்சியர் சூரஜ் மந்தாரே தெரிவித்தார்.

மாண்ட நோயாளிகள் அனைவருக்கும் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டிருந்தது. ஸாகிர் உசேன் மருத்துவமனையில் கொவிட்-19 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் நிகழ்ந்தபோது கிட்டத்தட்ட 150 நோயாளிகளுக்கு பிராணவாயு வழங்கும் கருவி பொருத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

பிராணவாயு தேவைப்படும் ஏறத்தாழ 31 நோயாளிகள் மற்ற மருத்துவமனைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பிராணவாயு கசிவு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்படும் என்று மகாராஷ்டிராவின் சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப்பே உறுதி அளித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்