வாஷிங்டன்: அமெரிக்க கறுப்பினத்தவரான திரு ஜார்ஜ் ஃபிளாய்ட் கொலை வழக்கில் முன்னாள் போலிஸ் அதிகாரி டெரிக் சாவின் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. மூன்று வாரங்கள் நடந்த விசாரணையில் சம்பவத்தை நேரில் கண்டவர்கள், போலிஸ் அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் என 45 பேர் சாட்சியம் அளித்தனர். 2020ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் தேதியன்று போலி 20 டாலர் நோட்டைப் பயன்படுத்தி மளிகைக் கடை ஒன்றில் 46 வயது திரு ஃபிளாய்ட் சிகரெட் வாங்கியதாகக் கூறி அவரை சாவினும் அவருடன் இருந்த மூன்று போலிஸ் அதிகாரிகளும் கைது செய்தனர். வெள்ளைக்காரரான சாவின், கிட்டத்தட்ட ஒன்பது நிமிடங்களுக்கு திரு ஃபிளாய்ட்டின் கழுத்தின் மேல் தமது முழங்காலை வைத்து அழுத்தியதைக் காணொளி காட்டியது.
அப்போது திரு ஃபிளாய்ட்டின் கைகளுக்கு விலங்கு மாட்டப்பட்டிருந்தது. சம்பவத்தின்போது திரு ஃபிளாய்ட், அம்மா என கதறி அழுததை, தம்மால் மூச்சுவிட முடியவில்லை என்று போலிஸ் அதிகாரிகளிடம் கூறியதைக் காணொளியில் காண முடிந்தது. அந்தக் காணொளியை சம்பவத்தை நேரில் கண்ட பதின்மவயதினரான டார்னெலா ஃபிரேசியர் எடுத்தார். தீர்ப்பு குறித்து திரு ஃபிளாய்ட்டின் இளைய சகோதரர் திரு ஃபிளோனிஸ் பிளாய்ட், "இன்று எங்களுக்கு நியாயம் கிடைத்து விட்டது," என மகிழ்ச்சி தெரிவித்தார்.

