லண்டன்: ஐரோப்பாவின் மேல்மட்டத்தில் உள்ள கிட்டத்தட்ட ஒரு டஜன் காற்பந்துக் குழுக்கள் சாம்பியன்ஸ் லீக் போட்டிக்கு எதிராக சூப்பர் லீக் என்ற ஒன்றை ஆரம்பிப்பதாக கடந்த திங்கட்கிழமையன்று முன்வைத்த திட்டம் அதற்கு அடுத்த 48 மணிநேரத்துக்குள் தவிடுபொடியாகி உள்ளது. இதில் பங்கேற்பதாக இருந்த ஆறு இங்கிலாந்துக் குழுக்கள் தற்போது வெளியேறிவிட்டன. இந்தத் திட்டம் முன்வைக்கப்பட்டவுடனேயே அதிகாரிகள், அரசியல்வாதிகள், காற்பந்து வீரர்கள், காற்பந்து ரசிகர்கள் என அனைவரிடமிருந்தும் பலத்த எதிர்ப்புக் கிளம்பியதைக் கண்டு அந்த ஆறு குழுக்களும் ெவளியேற முடிவு செய்ததாக தெரிகிறது.
மான்செஸ்டர் யுனைடெட், மான்செஸ்டர் சிட்டி, லிவர்பூல், ஆர்சனல், செல்சி, டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் ஆகியவையே அந்த ஆறு குழுக்கள். இதில் முதன் முதலாக வெளியேற முடிவு செய்தது மான்ெசஸ்டர் சிட்டி.
இதற்கிடையே, செல்சி குழுவின் ரசிகர்கள் தங்கள் குழுவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அந்தக் குழுவும் வெளியேற முடிவு செய்தது. இவ்விரு குழுக்களைத் தொடர்ந்து மற்ற குழுக்களும் வெளியேறின.
காற்பந்து உலகில் மிகவும் பிரபலமான, பல குழுக்களும் மிகவும் ஆர்வமுடன் பங்கேற்கும் சாம்பியன்ஸ் லீக் போட்டிகளுக்குச் சவால்விடும் விதமாக அமையவிருந்த இந்த சூப்பர் லீக் திட்டத்திற்கு எதிராக பலத்த எதிர்ப்புக் கிளம்பியது காற்பந்து ரசிகர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சியாக உள்ளது.

