உருமாறிய கிருமித்தொற்றால் சிங்கப்பூரில் எட்டுப் பேர் பாதிப்பு

உருமாறிய கிருமித்தொற்றால் சிங்கப்பூரில் எட்டுப் பேர் பாதிப்பு

1 mins read
d42ffbb3-1f65-4d6e-9e08-efcad7cfeec2
பாதிக்கப்பட்ட எட்டுப் பேரில் ஏழு பேர் பி117 வகை உருமாறிய கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் பி1351 வகை கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

இம்மாதம் 20ஆம் தேதி நிலவரப்படி உருமாறிய கொவிட்-19 கிருமித்தொற்றால் சிங்கப்பூரில் எட்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு இன்று (ஏப்ரல் 22) அறிவித்தது. தேவையான பொது சுகாதாரப் பராமரிப்பு நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படுவதாக அது கூறியது.

பாதிக்கப்பட்ட எட்டுப் பேரில் ஏழு பேர் பி117 வகை உருமாறிய கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது உருமாறிய பிரிட்டிஷ் கிருமித்தொற்று என்றும் அழைக்கப்படுகிறது. ஒருவர் பி1351 வகை கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இது உருமாறிய தென்னாப்பிரிக்க கிருமித்தொற்று என்று அழைக்கப்படுகிறது.

உருமாறிய தென்னாப்பிரிக்க கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர் கடற்துறையில் பணிபுரிபவர். வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வரும் கப்பல்களில் பணிபுரிபவர்களிடமிருந்து அவருக்கு நோய் பரவியிருக்கலாம் என்று சுகாதார அமைச்சு கூறியது.

தங்குவிடுதியில், வேலையிடத்தில் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பிரிட்டிஷ் உருமாறிய கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட ஏழு பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட எட்டு பேரில் மூவரின் குடும்பத்தினருக்குக் கிருமி பரவியுள்ளது.

ஆனால் அவர்களிடமிருந்து மற்றவர்களுக்குக் கிருமி பரவியதாக தெரியவில்லை என்று அமைச்சுகள் நிலைப் பணிக் குழு இன்று நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் சுகாதார அமைச்சின் மருத்துவச் சேவைப் பிரிவு இயக்குநரான இணைப் பேராசிரியர் கென்னத் மாக் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
கொரோனாகிருமித்தொற்று