கராச்சி: பாகிஸ்தானில் உள்ள ஆடம்பர ஹோட்டலில் குண்டு வெடித்ததில் ஐவருக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தார்.
குவெட்டா நகரில் உள்ள செரினா ஹோட்டலின் வாகனம் நிறுத்தும் இடத்தில் பாகிஸ்தானுக்கான சீனத் தூதரை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆஃப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பலுசிஸ்தான் தலைநகரான குவெட்டாவில் சீனத் தூதர் இருந்தாலும் குண்டு வெடிப்புச் சம்பவத்தின்போது ஹோட்டலில் அவர் இல்லை எனத் தெரிகிறது.
இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் உள்ள தலிபான் அமைப்பினர் பொறுப்பு ஏற்றுக்கொண்டனர்.
ஆனால் தாக்குதலுக்கான காரணத்தை அவர்கள் தெரிவிக்கவில்லை. ஹோட்டலின் வாகனம் நிறுத்தும் இடத்தில் குண்டு வெடித்ததால் தீ மளமளவென்று பரவி பல வாகனங்கள் எரிந்து நாசமாயின.
குவெட்டாவில் உள்ள செரினா ஹோட்டல் பிரபலமாக விளங்குகிறது. அரசாங்க அதிகாரிகளும் பிரமுகர்களும் அங்கு தங்குவது வழக்கம்.
இது நிச்சயம் பயங்கரவாதச் செயலாகத்தான் இருக்கும் என்று பாகிஸ்தானின் அமைச்சர் ஷேக் ரஷீத் அஹமட் சொன்னார்.
சீனத் தூதர் நோங் ரோங் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டதாகவும் குண்டு வெடிப்பதற்கு முன்பே அவர் ஹோட்டலில் இருந்து வெளியேறி விட்டதாகவும் அவர் தெரிவித் தார்.
இதனால் அவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.
அவர் தலைமையில் நான்கு பேர் ஹோட்டலில் இருந்ததாக நம்பப் படுகிறது.
இது ஒரு தற்கொலைத் தாக்கு தல் என்று உறுதியோடு கூறிய தலிபான் பேச்சாளர் ஒருவர், காரில் நிரப்பி வைக்கப்பட்ட குண்டுகளை தற்கொலையாளி வெடிக்கச் செய்துள்ளார் என்று குறிப்பிட்டார்.

