ஜகார்த்தா: இந்தோனீசிய கடற் பகுதியில் காணாமல் போன நீர் மூழ்கிக் கப்பலைத் தேடும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது.
உல்லாசத் தீவான பாலிக்கு அருகே அந்த நீர்மூழ்கிக் கப்பல் 53 பேருடன் காணாமல் போனது.
ஐந்து இந்தோனீசிய போர்க் கப்பல்களும் ஒரு ஹெலிகாப்டரும் தண்ணீரை சல்லடையாகச் சலித்துத் தேடி வருகின்றன.
பாலிக்குத் தெற்கே 23 கடல் மைல் தொலைவில் கப்பல் கடைசியாகக் காணப்பட்டது என்று இந்தோனீசிய ராணுவப் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
அந்த இடத்தைச் சுற்றி தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வரு வதாக பாலி ராணுவத் தளத்தில் நடைெபற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய மேஜர் ஜெனரல் அச்மட் ரியாட் கூறினார்.
'கேஆர்ஐ நங்காலா-402' எனும் அந்த நீர்மூழ்கிக் கப்பல் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது நீரில் மூழ்க அனுமதி கேட்டது.
அதன் பிறகு அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. புதன்கிழமை நடந்த சம்பவத்தில் நீர் மூழ்கிக் கப்பல் மேலே வராததால் சிறிது நேரத்திலேயே தேடும் பணி முடுக்கி விடப்பட்டதாகவும் மேஜர் ஜெனரல் அச்மட் சொன்னார்.
"அதே பகுதியில் எண்ணெய்க் கசிவு இருப்பதைக் காண முடிகிறது. பல இடங்களில் டீசல் வாசனை வீசுகிறது. ஆனால் எந்த நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து எண்ெணய் கசிந்துள்ளது என்பதை நிர்ணயிக்க முடியவில்லை," என்றார் அவர்.
இதற்கிடையே இந்தோனீசிய அரசாங்கம், அனைத்துலக உதவிக்கு அழைப்பு விடுத்ததால் சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் உதவிக்கு விரைந்துள்ளன.
நீர்மூழ்கிக் கப்பலை அனுப்பி சிங்கப்பூர் உதவி செய்யவிருக்கிறது என்று மேஜர் ஜெனரல் அச்மட் தெரிவித்தார்.
புதன்கிழமை அன்று சாங்கி கடற்படைத் தளத்திலிருந்து புறப்பட்டதாகக் கூறப்படும் சிங்கப்பூரின் கப்பல் சனிக்கிழமை இந்தோனீசியாவை வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசியாவும் உதவிக்கு 'எம்வி மெகா பக்தி' என்ற கப்பலை அனுப்பியிருக்கிறது. இந்தக் கப்பல் நாளை மறுநாள் வரவிருக்கிறது. அமெரிக்கா, ஜெர்மனி, ஃபிரான்ஸ், துருக்கி, ரஷ்யா ஆகிய நாடுகளும் நீர் மூழ்கிக் கப்பலை கண்டுபிடிக்க உதவிக் கரம் நீட்டியுள்ளன.

