சிங்கப்பூரில் இந்த மாதம் கிட்டத்தட்ட 900 வேலையிடங்களில் மனிதவள அமைச்சு பரிசோதனைகளை நடத்தியுள்ளது.
கொவிட்-19 பாதுகாப்பு விதிகளை மீறியதற்காக ஏறக்குறைய 10 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி ஃபேஸ்புக்கில் தெரிவித்த அமைச்சு, சமூகத்தொற்று ஏற்படும்போது வேலையிடங்களில் பரிசோதனைகளை நடத்தி தொற்று மேலும் பரவாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதை தான் உறுதிப்படுத்துவதாக தெரிவித்தது.
அண்மையில் சமூகத்தொற்று ஏற்பட்ட வேலையிடத்தைப் பரிசோதித்தபோது அங்கு பல பாதுகாப்புக் குறைபாடுகள் இருந்தது தெரியவந்ததாக அமைச்சு குறிப்பிட்டது. குறைபாடுகள் காணப்பட்ட வேலையிடத்தை மூடும்படி உத்தரவிடப்போவதாகவும் தெரிவித்த அமைச்சு, அமலாக்க முயற்சிகளைத் தொடர்ந்து தீவிரப்படுத்தி வேலையிடங்களில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைவின்றி முழுமையாக இருப்பதை உறுதிப்படுத்தப்போவதாகவும் கூறியது.
ஏப்ரல் 5 முதல் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள போதி லும் வேலையிடங்கள் பாதுகாப்புமிக்கதாக இருப்பதை முதலாளிகள் உறுதிப்படுத்த வேண்டுமென அமைச்சு வலியுறுத்தியது.
விதிகளை மீறும் முதலாளிகளுக்கு அபராதம் விதிக்கப்படலாம். அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்படலாம்.
கடுமையான விதிமீறல்கள் இருந்தால் வேலையிடத்தை மூடும்படி உத்தரவிடப்படும்.

