இந்தியாவில் கொவிட்-19 தொற்றால் மரணமடைந்தோர் எண்ணிக்கை உச்சத்தை எட்டியுள்ள நிலையில், தலைநகர் புதுடெல்லியிலும் நாட்டின் மற்ற பகுதிகளிலும் தகனச்சாலைகளில் சடலங்கள் நிரம்பி வழிகின்றன.
இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் இந்தியாவில் 346,786 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இந்திய சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இரண்டாவது கிருமி அலையில் இந்தியா சிக்குண்டு தவிக்க, டெல்லியில் நான்கு நிமிடத்திற்கு ஒரு கொவிட்-19 உயிரிழப்பு பதிவாகி வருகிறது.
கர்நாடகாவில், உயிரிழந்தவர்களின் உடல்களைக் குடும்பங்கள் தங்களது சொந்த பண்ணைகளில், நிலங்களில் அல்லது வீட்டு கொல்லைகளில் தகனம் செய்யவோ நல்லடக்கம் செய்யவோ அனுமதிக்கும் நிலைக்கு அம்மாநில அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.
கடந்த ஏழு ஆண்டுகளாக அவசர மருத்துவ வாகனத்தை ஓட்டும் 25 வயது ஓட்டுவர் ஒருவர், "சடலங்கள் தகனம் செய்யப்படும் இதுபோன்ற ஒரு நிலையை நான் இதுவரை பார்த்ததே இல்லை," என்றார்.

