ஜகார்த்தா: பாலிக்கு அருகில் உள்ள கடற்பகுதியில் 53 பேருடன் காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பலின் உள்ளே இருந்தவை என்று கருதப்படும் பொருள்கள் சில தேடுதல் பணியின்போது கண்டுபிடிக்கப்பட்டதாக இந்தோனீசிய
ஆயுதப்படைத் தளபதி ஹாடி ஜஜன்டோ நேற்று செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.
அந்தக் கப்பல் கடந்த புதன்
கிழமை காணாமல் போன இடம் என்று கருதப்படும் இடத்துக்கு அருகில் காணப்பட்ட எண்ணெய்த் துளிகள், கப்பலுக்குள்ளிருந்த பாகங்களின் சிதறல்கள் போன்ற ஆதாரங்களின் அடிப்படையில், கப்பல் கீழே சென்றிருக்கலாம் எனக் கருதுவதாக திரு ஹாடி குறிப்பிட்டார்.
கப்பலின் வெப்பம் கடத்தா தாளின் ஒரு பகுதி, நீர்மூழ்கிக் கப்பலுக்குள் இருந்த மசகு போத்தல் போன்ற பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக இந்தோனீசிய கடற்படைத் தலைவர் யுடோ மார்கோனோ குறிப்பிட்டார்.
பெரிஸ்கோப் நன்கு செயல்படுவதை உறுதிப்படுத்த மசகு பயன்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார். 850 மீட்டர் ஆழத்திலிருந்து நீர்மூழ்கிக் கப்பலை வெளியே கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக திரு யுடோ குறிப்பிட்டார்.
"நீர்மூழ்கிக் கப்பல் 400 மீட்டரிலிருந்து 500 மீட்டருக்கு இடைப்பட்ட ஆழத்தில் கடலில் மூழ்கியபோது உடையத் தொடங்கியிருக்கலாம்," என்று குறிப்பிட்ட அவர், உயிருடன் இருப்பவர்கள் அல்லது சடலங்கள் என எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றார் அவர்.
சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகள் தேடுதல் பணியில் பெரிதும் உதவியதாக அவர் குறிப்பிட்டார்.
பயன்பாட்டுக்கு வந்து 44
ஆண்டுகளான கேஆர்ஐ நங்காலா 402 எனும் அந்த நீர்மூழ்கிக் கப்பல், கடந்த புதன்கிழமை அதிகாலை வேளையில் கடற்கணைப் பயிற்சிக்காக நீருக்குள் மூழ்க அனுமதி கோரியிருந்தது. அதற்குப் பிறகு அதனுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
நீருக்குள் சென்றபோது மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கலாம் எனவும் அதன் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து, அவசரகால நடைமுறைகளை மேற்கொள்ள இயலாமல் போயிருக்கலாம் எனவும் இந்தோனீசிய கடற்படை தெரிவித்தது.
நீருக்குள் 600லிருந்து 700 மீட்டர் வரையிலான ஆழத்தில் நீர்மூழ்கி இருந்தபோது தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கலாம் என்று கடற்படைப் பேச்சாளார் ஜூலியஸ் விடோஜோனோ குறிப்பிட்டார். வடிவமைப்பின்படி, அந்தக் கப்பல் 500 மீட்டர் ஆழம் வரை செயல்படும் ஆற்றல் பெற்றிருந்ததாகக் கூறப்பட்டது. இந்தோனீசியா அதன் ராணுவ தளவாடங்களை அண்மைக் காலத்தில் மேம்படுத்தி வரும் நிலையில், நிகழ்ந்த நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பான முதல் பெரிய பேரிடர் இது எனக் கூறப்படுகிறது.

