உலகளவில் ஒரே நாளில் கொரோனா தொற்றியோர் எண்ணிக்கை புதிய உச்சம் தொட்டது
பாரிஸ்: உலகம் முழுவதும் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டோர் எண்ணிக்கை ஒரு பில்லியனைத் தாண்டிவிட்டது.
நேற்று முன்தின நிலவரப்படி, 207 நாடுகளிலும் ஆட்சிப் பகுதிகளிலும் 1,002,938,540 பேர் தடுப்பூசி போட்டுள்ளதாக ஏஎஃப்பி புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
இருப்பினும், உலகளவில் புதிய உச்சமாக கடந்த வெள்ளிக்கிழமை ஒரே நாளில் மேலும் 893,000 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இந்தியாவில் கிருமிப் பரவல் நாளுக்கு நாள் மோசமாகிவருவதே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. அந்நாட்டில் தொடர்ந்து நான்காவது நாளாக முந்நூறாயிரத்திற்கும் அதிகமானோர் புதிதாக கொரோனா பாதிப்புக்குள்ளாகினர்.
தாய்லாந்தில் தொடர்ந்து 2வது நாளாக நேற்று முன்தினம் புதிய உச்சமாக 11 பேர் கிருமித்தொற்றால் உயிரிழந்துவிட்டனர்.
அங்கு புதிதாக 2,348 பேரை கொரோனா தொற்ற, மொத்த பாதிப்பு 55,640ஆக உயர்ந்தது. கொரோனாவால் அங்கு இதுவரை 140 பேர் மாண்டுவிட்டனர்.
இதையடுத்து, கொரோனா பரவலைத் தடுக்கும் முயற்சியாக தேவைப்பட்டால் மாநில ஆளுநர்கள் பொது இடங்களை மூடலாம் என்றும் ஊரடங்கு விதிக்கலாம் என்றும் பிரதமர் பிரயுத் சான் ஓ சா தமது ஃபேஸ்புக் பக்கம் வழியாகத் தெரிவித்து இருக்கிறார்.
தலைநகர் பேங்காக்கில் பூங்காக்கள், உடற்பயிற்சி நிலையங்கள், திரையரங்குகள், பகல்நேரப் பராமரிப்பு நிலையங்கள் உள்ளிட்டவற்றை இன்று முதல் மே 9ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 2019 டிசம்பரில் சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கிருமித்தொற்று உலகம் முழுவதும் இதுவரை மூன்று மில்லியனுக்கும் மேற்பட்டோரின் உயிரைப் பறித்துவிட்டது.
கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பிரேசிலில் இம்மாதம் மட்டும் ஏறக்குறைய 68,000 பேர் இறந்துவிட்டனர்.
கொரோனா பரவல் தணிவதற்கான அறிகுறி ஏதும் தென்படாத நிலையில், பல நாட்டு அரசாங்கங்களும் தடுப்பூசிமீதே நம்பிக்கை வைத்துள்ளன. உலகம் முழுவதும், கடந்த ஒரு மாதத்தில் தடுப்பூசி போடுவது இரட்டிப்படைந்துள்ளது.
ஆயினும், பணக்கார நாடுகளில் தடுப்பூசி கிடைப்பது எளிதாக இருந்து வருகிறது. உலகளவில் தடுப்பூசி போட்டுக்கொண்டோரில் 47 விழுக்காட்டினர் அதிக வருமானம் ஈட்டும் நாடுகளைச் சேர்ந்தவர்கள். உலக மக்கள்தொகையில் அந்நாடுகளின் பங்கு 16% மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
மாறாக, தடுப்பூசி போட்டுக்கொண்டோரில் குறைந்த வருமான நாடுகளின் பங்கு வெறும் 0.2% மட்டும்தான்.

