யங்கூன்: மியன்மாரில் வன்முறையை முடிவிற்குக் கொண்டுவர ஆசியான்-மியன்மார் ராணுவம் இடையே எட்டப்பட்டுள்ள உடன்பாட்டுக்கு அந்நாட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மியன்மாரில் ஜனநாயகத்தை மீண்டும் மலரச் செய்யவும் நூற்றுக்கணக்கான மக்களைக் கொன்றதற்கு ராணுவத்தைப் பொறுப்பேற்றுக்கொள்ள வைக்கவும் அந்த உடன்பாடு தவறிவிட்டதாக மியன்மார் மக்கள் சாடியுள்ளனர்.
இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் நேற்று முன்தினம் நடந்த உச்சநிலைக் கூட்டத்தில், மியன்மார் ராணுவத் தலைவர் மின் அவுங் லைய்ங்கும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் உட்பட ஆறு ஆசியான் நாடுகளின் தலைவர்களும் கலந்துகொண்டனர்.
"ஆசியானின் அறிக்கை, மியன்மார் ராணுவத்தால் துன்புறுத்தப்பட்ட, கொல்லப்பட்ட, அச்சுறுத்தலுக்கு ஆளான மக்களின் முகங்களில் விடப்பட்ட அறைபோல் இருக்கிறது," என்று மவ்ச்சி துன் எனும் ஃபேஸ்புக் பயனாளர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தகைய மனப்போக்குடனும் அணுகுமுறையுடனும் கூடிய ஆசியானின் உதவி தங்களுக்குத் தேவையில்லை என்றும் அவர் கூறி இருக்கிறார்.
வன்முறையை முடிவுக்குக் கொணர்தல், எல்லாத் தரப்பினருடனும் ஆக்ககரமான பேச்சுவார்த்தை, அதற்கு வகைசெய்ய சிறப்பு ஆசியான் தூதரை நியமித்தல், அத்தூதரை மியன்மாருக்கு வருகைதர அனுமதித்தல், உதவிகளை ஏற்றல் ஆகிய ஐந்து அம்சங்களில் உடன்பாடு எட்டப்பட்டதாக ஆசியான் அறிக்கை தெரிவித்தது.
அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என ஆசியான் உச்சநிலைக் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டபோதும் அதுகுறித்து அறிக்கையில் எதுவும் இடம்பெறவில்லை.
மியன்மாரில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி ஆட்சியைக் கவிழ்த்து, நிர்வாகத்தை ராணுவம் கைப்பற்றியது. அதன்பின் நடந்த ஜனநாயக ஆதரவுப் போராட்டங்களில் 748 பேர் கொல்லப்பட்டதாகவும் 3,300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 'அரசியல் கைதிகளுக்கான உதவிச் சங்கம்' எனும் அமைப்பு தெரிவித்துள்ளது.

