பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள ஒரு கொவிட்-19 மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 82 பேர் உயிரிழந்தனர்.
ஆக்சிஜன் கலன் வெடித்ததால் தீ விபத்து நிகழ்ந்ததாக மருத்துவ வட்டாரங்களைச் சுட்டி 'ஏஎஃப்பி' செய்தி வெளியிட்டுள்ளது. இவ்விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகப் பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவித்தன. சம்பவ இடத்தில் இருந்து 90க்கும் மேற்பட்டோரை மீட்டதாகக் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
மீட்கப்பட்ட நோயாளிகள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து விசாரிக்க ஓர் ஆணையத்தை அமைக்குமாறு சுகாதார அமைச்சுக்கு அழைப்பு விடுத்துள்ள பாக்தாத் ஆளுநர் முகம்மது ஜாபர், அதன்மூலம் தங்களது பணியைச் சரியாகச் செய்யாதவர்களை நீதியின்முன் நிறுத்த முடியும் என்றும் கூறியுள்ளார்.
இதனிடையே, சுகாதார அமைச்சிடம் தங்களது உயிரை ஒப்படைத்த கொவிட்-19 நோயாளிகளுக்கு இழைக்கப்பட்ட குற்றம் என ஈராக் மனித உரிமை ஆணையம் குறிப்பிட்டுள்ளது. சுகாதார அமைச்சர் ஹசன் அல் தமிமியைப் பதவிநீக்கம் செய்து, நீதியின்முன் நிறுத்துமாறு பிரதமர் முஸ்தஃபா அல் கதெமியை ஆணையம் வலியுறுத்தி இருக்கிறது.
கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஈராக்கில் முதன்முதலாக கொவிட்-19 பாதிப்பு கண்டறியப்பட்டது. இதுவரை அங்கு 1,025,288 பேரை கொரோனா தொற்றிவிட்டதாகவும் அவர்களில் 15,217 பேர் இறந்துவிட்டதாகவும் சுகாதார அமைச்சின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

