இஸ்கந்தர் புத்ரி: சிங்கப்பூரில் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட மலேசிய ஊழியர்களை, குறிப்பாக நோன்புப் பெருநாளைக் கொண்டாட நாடு திரும்ப அனுமதிப்பது குறித்து ஜோகூர் மாநில அரசு ஆராய்ந்து வருகிறது.
"சிங்கப்பூரில் தடுப்பூசி போட்டுக்கொண்ட மலேசிய ஊழியர்களுக்குச் சிறப்பு வழித்தட அனுமதி வழங்கப்படலாம்," என்று ஜோகூர் முதலீடு, தொழில்முனைவர் மேம்பாடு, கூட்டுறவு, மனிதவளக் குழுவின் தலைவர் முகம்மது இசார் அகமது கூறியதாக 'தி ஸ்டார்' செய்தி வெளியிட்டு உள்ளது.
சிங்கப்பூரில் கிருமித்தொற்றுக் குழுமங்களுக்குள் வருவோருக்கும் அந்தத் தளர்வு வழங்கப்படுமா என்பது குறித்துக் கலந்தாலோசிக்க வேண்டியுள்ளது என்றும் அவர் சொன்னார்.
"ஜோகூர் மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், சிங்கப்பூருடனான எல்லைத் திறப்பு உடன்பாட்டைப் பூர்த்தி செய்ய ஏதுவாக தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கையை ஜோகூர் எடுத்து வருகிறது," என்றார் திரு இசார்.
இவ்விவகாரம் தொடர்பில் அடுத்த மாதத் தொடக்கத்தில் மலேசியப் பிரதமர் முகைதீன் யாசினும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கும் பேச்சுவார்த்தை நடத்துவர் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

