பைடன் நிர்வாகத்தின் அதிகாரிகள், தடுப்பூசிகளின் ஏற்றுமதிகள் மீதான தடையை அகற்றும்படியான நெருக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். இந்தியாவில் விரைவாக அதிகரிக்கும் கொவிட்-19 தொடர்பான மரணங்களால் இந்த நெருக்குதல் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் நாளுக்கு 350,000 புதிய கிருமித்தொற்றுகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த அதிகாரபூர்வ எண்ணிக்கை, உண்மையான கிருமித்தொற்று எண்ணிக்கையைவிட வெகு குறைவாக இருக்கும் என நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர்.
ஏற்றுமதி தடை குறித்த கேள்விக்கு பதிலளித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் நெட் பிரைஸ், "அமெரிக்க மக்களுக்குத் தடுப்பூசி போடுவது குறித்த முயற்சியில் அமெரிக்கா தீவிரமான, பயன் அளிக்கக்கூடிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது," என்று கூறினார்.
அமெரிக்கர்கள் மட்டும் தடுப்பூசி போட்டுக்கொள்வது அமெரிக்காவுக்கு மட்டுமின்றி உலகத்திற்குமே நல்லது என்று திரு பிரைஸ் கடந்த வியாழக்கிழமை தெரிவித்தார்.
அமெரிக்காவின் அணுகுமுறையை இந்தியாவில் சிலர் குறைகூறியுள்ளர்.
"தடுப்பூசிகளை இருப்பில் வைத்து தடுப்பூசி தயாரிப்புக்கான முக்கிய மூலப்பொருட்களை இந்தியாவுக்கு வரவிடாமல் தடுப்பதன் முலம் அமெரிக்காக இந்தியாவுடனான தனது பங்காளித்துவத்தை பலவீனப்படுத்தி வருகிறது," என்று மும்பையைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி அரசியல்வாதி மிலிண்ட் டியோரா டுவிட்டரில் தெரிவித்தார்.
"இது மிகவும் பரிதாபமானது. பருவநிலை நெருக்கடி நிலையில் அமெரிக்க தலைமைத்துவம் இப்படித்தான் இருக்குமா?" என்று உலக வள ஆய்வு நிலையத்தின் இந்திய அலுவலகத்தின் பருநிலை திட்ட இயக்குநர் குமாரி உல்கா கேல்கார் வினவினார்.
இந்தியாவின் சிரம் இன்ஸ்டிடியூட்டின் தலைமை நிர்வாகி திரு அடார் பூனாவாலா, ஒரு மாதத்திற்கு முன்னதாக தடையை ரத்து செய்யும்படி திரு பைடனிடம் கோரிக்கை விடுத்தார்.

