புதுடெல்லி: இந்தியாவில் 2வது கொவிட்-19 அலை கடுமையாகப் பரவுவதை அடுத்து இந்திய பயணிகளுக்கு பிரிட்டன் தடை விதித்துள்ளது.
ஆனால் அதற்கு முன்னதாகவே லட்சக்கணக்கில் பணத்தைச் செலவிட்டு தனி விமானங்களில் பெரும் பணக்காரர்கள் லண்டன் சென்றுவிட்டார்கள்.
பயணத் தடை வெள்ளிக்கிழமை நடப்புக்கு வந்தது. அதற்கு முந்தைய 24 மணி நேரத்தில் எட்டு தனியார் விமானங்கள் இந்தியாவில் இருந்து புறப்பட்டு லண்டனில் தரையிறங்கியதாக 'ஃபிளைட்அவெர்' என்ற இணையத்தளத்தை மேற்கோள்காட்டி டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்து இருக்கிறது.
இத்தகைய வாடகை விமானத்திற்குக் குறைந்தபட்சம் ரூ. 72 லட்சம் செலவாகும் என்றும் அது குறிப்பிட்டு உள்ளது.
அந்த விமானங்களில் நான்கு விமானங்கள் மும்பையில் இருந்தும் டெல்லியில் இருந்து மூன்று விமானங்களும் அகமதாபாத் நகரில் இருந்து ஒரு விமானமும் லண்டன் புறப்பட்டுச் சென்றன.
சென்ற வாரம் நேரடி விமானங்களில் இந்தியர்கள் பலருக்கு இடம் கிடைக்கவில்லை என்றும் அதையடுத்து ஒரு சில நிறுவனங்கள் இந்தியாவில் இருந்து கூடுதல் சேவைகளை நடத்த அனுமதி கேட்டதாகவும் தெரிய வந்தது.
இதனிடையே, இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையில் வாடகை விமானச் சேவைகளை நடத்துவதற்கு அனுமதி கேட்டு சென்ற வாரம் பிரிட்டனைச் சாராத நிறுவனங்களிடம் இருந்து கோரிக்கை வந்ததாக பிரிட்டன் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியதாகவும் அந்தச் செய்தித்தாள் தெரிவித்தது.
ஆனால் அத்தகைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன அல்லது மீட்டுக்கொள்ளப்பட்டன.
இந்தியாவில் இருந்து பயணிகள் பிரிட்டனுக்கு வர தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தங்கி இருக்கும் பிரிட்டிஷ் குடிமக்கள் நாடு திரும்பும்போது 10 நாட்கள் ஹோட்டலில் தங்களைக் கட்டாயமாக தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது.

