செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
2d46e433-8e40-4eae-9803-40c47c7334a1
-

கடற்படையில் புதிய மேம்பட்ட

3 கலன்களைச் சேர்த்தது சீனா

பெய்ஜிங்: நீரிலும், நிலத்திலும் தாக்குதல் நடத்தக்கூடிய கப்பல் மற்றும் இரண்டு கலன்கள் சீன அதிபர் சி ஜின்பிங் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. 'தி ஹைனான்', 'தி டாலியன்', 'தி சாங்ஸெங்-18' ஆகியவை தெற்கு சீனாவின் ஹைனான் வட்டாரத்தில் உள்ள கடற்படைத் தளம் ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பயன்பாட்டில் இருப்பதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்தது. பீப்பிள்ஸ் லிபரேஷன் ஆர்மி கடற்படை தனது 72வது ஆண்டு நிறைவைக் கொண்டாடிய நிகழ்வில் கலன்கள் அர்ப்பணிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. சீனாவின் முதல் 'டைப் 075' நீர், நிலத் தாக்குதல் கப்பல் தி ஹைனான். அது அணு ஆயுதம் தாங்கிய நீர்மூழ்கிக் கப்பல். தி டாலியன் ஒரு 'டைப் 055' அழிப்பான் என குளோபல் டைம்ஸ் குறிப்பிட்டது. தென் சீனக் கடல் பகுதியில் பிரச்சினை உள்ள கடற்பகுதிகளில் சீனாவின் கலன்கள் அடிக்கடி காணப்படுவதால் சீனாவுக்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் தொடர்ந்து பிரச்சினை நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

மியன்மாரில் புதிய ஒத்துழையாமை இயக்கத்துக்கு அழைப்பு

யங்கூன்: மியன்மாரின் ராணுவ ஆட்சிக்கு எதிராகப் போராட்டம் நடத்துவோர் புதிய ஒத்துழையாமை இயக்கத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். மின்சாரக் கட்டணம், விவசாயக் கடன்கள் போன்றவற்றைச் செலுத்த வேண்டாம் எனவும் பிள்ளைகளைப் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தோனீசியாவின் ஜகார்த்தாவில் கடந்த சனிக்கிழமை ஆசியான் கூட்டத்தில் பங்கேற்ற மியன்மார் ராணுவத் தலைவர் மின் அவுங் லைங், மாநாட்டில் ஒப்பந்தம் ஒன்றை எட்டியு நிலையில் மியன்மாரின் பெரிய நகரங்களில் நேற்று முன்தினம் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. திருவாட்டி ஆங் சான் சூச்சி உட்பட அரசியல் கைதிகளை விடுவிக்க ராணுவத் தலைவர் ஒப்புக்கொள்ளவில்லை. அதேபோல மியன்மார் நெருக்கடியைச் சரி செய்ய கால வரையறை எதுவும் அந்த மாநாட்டில் எட்டப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. திருவாட்டி ஆங் சான் சூச்சி கைதாகி 12 வாரங்கள் ஆகியுள்ள நிலையில் அவர் மீதான வழக்கு விசாரணை மே மாதம் 10ஆம் தேதி வரை தள்ளி வைக்கப்பட்டிருப்பதாகவும் அவரைச் சந்திக்க அவரது வழக்கறிஞர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை எனவும் கூறப்பட்டது. திருவாட்டி சூச்சி மீது கீழறுப்பு உட்பட ஆறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் அரசாங்க அலுவலக ரகசியச் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டு மிகவும் கடுமையான குற்றச்சாட்டு எனவும் கூறப்படுகிறது.

மிச்சிகனில் கடும் கொவிட்-19

பாதிப்புக்குள்ளாகும் இளம் வயதினர்

மிச்சிகன்: அமெரிக்காவில் கொரோனா தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் ஒன்றான ராயல் ஓக்கில் உள்ள பியூமன்ட் மருத்துவமனையில் கொவிட்-19 நோயாளிகள் நிரம்பியுள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்ட பலர் படுக்கையிலிருந்து எழுந்து அமரவே சிரமப்படும் வேளையில், அதிக தொழில்நுட்ப உதவி தேவைப்படும் நோயாளிகளிடமிருந்து அழைப்புகள் வந்தவண்ணமே உள்ளன. ஆனால், இப்போது உதவி தேவைப்படும் கொவிட்-19 நோயாளிகளில் பெரும்பாலானோர் இளையர்கள் மற்றும் நடுத்தர வயதினர் என்று கூறப்படுகிறது. 20, 30, 40களில் இருப்போர் மிச்சிகன் மருத்துவமனைகளில் கடும் கொவிட்-19 தொற்றுக்காக அனுமதிக்கப்படுவது, இந்த அலை தொடங்குவதற்கு முன்பு அங்கு தொற்று உச்சத்தில் இருந்தபோது அனுமதிக்கப்பட்ட அதே வயது வரம்புகளில் இருந்தோரைவிட இரண்டு மடங்கு என்று கூறப்படுகிறது. அங்கு 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயது உடையவர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளதால் அந்த வயதுடையவர்கள் கொவிட்-19க்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவது குறைந்துள்ளது.

பைடனும் புட்டினும் சந்திக்க வாய்ப்பு

மாஸ்கோ: அமெரிக்க, ரஷ்ய நாடுகளின் அதிபர்கள் ஜூன் மாதத்தில் சந்திக்கக்கூடும் என நேற்று ஆர்ஐஏ செய்தி நிறுவனம் குறிப்பிட்டது. இருப்பினும், சந்திப்பு குறித்து உறுதியான முடிவு எடுக்கப்படவில்லை என ரஷ்ய வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் யூரி யுஷாக்கோவ் குறிப்பிட்டார். சந்திப்பு தொடர்பாக திரு பைடன் முன் வைத்த கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அது தற்போது ஆலோசனையில் இருப்பதாகவும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கேய் லாவோர்வ் குறிப்பிட்டார். ஐரோப்பிய நாடு ஒன்றில் ஜூன் மாதம் 15, 16 தேதிகளில் சந்திக்கலாம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்ததாக ரஷ்யாவின் கொம்மெர்சன்ட் நாளிதழ் குறிப்பிட்டது.