வாஷிங்டன்: குவாட்டமாலா அதிபர் அலெஜாண்டிரோ கியாமாட்டேயுடனான மெய்நிகர் கலந்துரையாடலுக்குப் பிறகு, மத்திய அமெரிக்க நாடுகளுக்குக் கூடுதலாக 310 மில்லியன் அமெரிக்க டாலர் ($411 மில்லியன்) நிதியுதவியை
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் அறிவித்துள்ளார்.
குடிநுழைவுப் பிரச்சினைகளைக் கட்டுப்படுத்த இரு நாடுகளும்
ஒன்றிணைந்து செயல்பட இணங்கியுள்ளன. குவாட்டமாலா, ஹோண்டுராஸ், எல் சால்வடோர் போன்ற மத்திய அமெரிக்க நாடுகளிலிருந்து அதிகமானோர் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைகின்றனர்.
இதைத் தடுக்க நிதியுதவி வழங்கப்படுகிறது.
"உங்களுடன் இணைந்து செயல்பட விரும்புகிறோம். மத்திய அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் சொந்த நாட்டிலிலேயே இருப்பதை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் நல்ல முறையில் வாழ அவர்களுக்குப் பல வாய்ப்புகள் உருவாக்கப்படும்," என்றார் திருவாட்டி ஹாரிஸ்.
வரும் ஜூன் மாதத்தில் மத்திய அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சுகாதாரம், கல்வி முதலியவற்றுக்கும் அமெரிக்கா நிதியுதவு வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

