யங்கூன்: மியன்மாரில் நிலவும் நெருக்கடிநிலைக்குத் தீர்வுகாண ஆசியான் தலைவர்களுக்கான கூட்டத்தில் முன்வைக்கப்படும் ஆக்கபூர்வப் பரிந்துரைகள்
பரிசீலிக்கப்படும் என்று மியன்மார் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஆசியானின் கொள்கை
களுக்கு உட்பட்டும் மியன்மாரின் நலனைக் கருத்தில் கொண்டும் பரிந்துரைக்கப்படும் தீர்வுகள் பரிசீலனை செய்யப்படும் என்று அது கூறியது.
இதற்கிடையே, மியன்மாரில் நிகழும் வன்முறைச் சம்பவங்கள் தமது மனதை சுக்குநூறாக உடைப்பதாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தமது மனவேதனையை வெளிப்
படுத்தியுள்ளார். மியன்மார் ராணுவத் தலைவர்களுக்கு எதிராக உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திரு ஒபாமா அழைப்பு விடுத்தார்.
இது ஒருபுறம் இருக்க,
தாய்லாந்துடனான மியன்மார் எல்லையில் ராணுவ முகாமை கெரன் பிரிவினைவாத அமைப்பு கைப்பற்றியுள்ளது.
இதுகுறித்து மியன்மார் ராணுவம் உடனடியாகக் கருத்து தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், ராணுவத்துடன் சண்டையிட தயாராக இருப்பதாக முழக்கமிட்டுக்கொண்டே ஏறத்தாழ 120 இளம் ஆர்ப்பாட்டக்காரர்கள் பயிற்சி பெறுவதைக் காட்டும் காணொளி வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் காணொளியைப் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஐக்கிய தற்காப்புப் படை வெளியிட்டுள்ளது. ஆட்சிக் கவிழ்ப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய சிலரால் இந்த அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.