வெஸ்ட்லைட் உட்லண்ட்ஸ் தங்குவிடுதியில் 24 வெளிநாட்டு ஊழியர்களுக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்கள் ஏற்கெனவே கிருமித்தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள்.
அவர்களில் ஐவருக்கு மீண்டும் கிருமித்தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என்று அமைச்சு நேற்று (ஏப்ரல் 27) இரவு தெரிவித்தது.
அந்த விடுதியில் வசித்த 35 வயது பங்ளாதேஷ் ஊழியருக்கும் அவருடன் அதே அறையில் வசித்த ஊழியருக்கும் கடந்த வாரம் தொற்று உறுதியாகி இருந்தது.
மீண்டும் கிருமித்தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படும் அந்த ஐவரும் மேற்கூறப்பட்ட அந்த இருவருடன் ஒரே அறையில் வசித்தனர்.
"தங்குவிடுதியின் மற்ற பகுதிகளுக்கும் கிருமி பரவியிருப்பதற்கான எந்தவோர் ஆதாரமும் தற்போது இல்லை," என்று அமைச்சு கூறியது.
வெஸ்ட்லைட் உட்லண்ட்ஸ் தங்குவிடுதியில் வசிப்போருக்கு தாமும் மனிதவள அமைச்சும் சேர்ந்து சிறப்புப் பரிசோதனையை நடத்தியதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
மீண்டும் கிருமித்தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படும் அந்த ஐந்து ஊழியர்களில் இருவர் இந்த மாதம் 6ஆம் தேதி பங்ளாதேஷிலிருந்து சிங்கப்பூர் வந்தனர்.
"வெளிநாட்டில் இருந்தபோது அவர்களைக் கிருமி தொற்றியிருக்கலாம் என்றும் அவர்கள் இங்கு வந்தவுடன் விடுதி அறையில் மற்றவர்களுக்கும் கிருமி தொற்றியிருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
அந்த 35 வயது பங்ளாதேஷ் ஊழியர், அவருடன் ஒரே அறையில் வசித்தவருடன் தொடர்பில் இருந்த அந்த ஐவரையும் சேர்த்து இப்போது புதிய கிருமித்தொற்றுக் குழுமம் ஒன்று உருவாகியுள்ளது.

