நகைகளை அடகு வைத்து மருத்துவமனைக்கு 100 மின்விசிறிகளை நன்கொடை வழங்கிய தம்பதிக்கு பாராட்டுகள் குவிகின்றன

நகைகளை அடகு வைத்து மருத்துவமனைக்கு 100 மின்விசிறிகளை நன்கொடை வழங்கிய தம்பதிக்கு பாராட்டுகள் குவிகின்றன

1 mins read
61d86a80-d69b-4b79-9337-692494b46af9
நோயாளிகளின் நிலையை அறிந்த ராஜேஷ்-ரேவதி தம்பதி (வலது), 100 மின்விசிறிகளை மருத்துவமனைக்கு நன்கொடை வழங்கியுள்ளனர். படம்: தமிழக ஊடகம் -

தமிழகத்தின் கோவையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு 100 மின்விசிறிகளை நன்கொடை வழங்கிய தம்பதிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கோவையில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் ஏராளமான நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த மருத்துவமனையில் தற்போது 700க்கும் அதிகமான நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிருமிப் பரவலைத் தடுக்க அந்த மருத்துவமனையில் குளிர்சாதன வசதி இயக்கப்படவில்லை. இதனால், நோயாளிகள் கோடை வெயிலை சமாளிக்க முடியாமல் அவதியுறுகின்றனர்.

நோயாளிகளின் நிலையை அறிந்த ராஜேஷ்-ரேவதி தம்பதி, ரூ.2.50 லட்சம் மதிப்பிலான 100 மின்விசிறிகளை மருத்துவமனைக்கு நன்கொடை வழங்கியுள்ளனர்.

அந்த மருத்துவமனை தலைவர் ரவீந்திரன் இதுகுறித்து கூறுகையில், ''நோயாளிகளின் நிலையை அறிந்த இந்தத் தம்பதி, மின்விசிறிகளை நன்கொடை அளிப்பது குறித்து விருப்பம் தெரிவித்தனர். ஓரிரு மின்விசிறிகளை நன்கொடை வழங்குவர் என நாங்கள் எதிர்பார்த்த நிலையில், 100 மின்விசிறிகளை நன்கொடை வழங்கியிருப்பது எங்களுக்கு ஆச்சரியத்தைத் தந்துள்ளது. அவற்றை எவ்வாறு வாங்கினீர்கள் என கேட்டபோது, நகைகளை அடகு வைத்து வாங்கியதாக அந்தத் தம்பதி தெரிவித்தனர்.

"இதையடுத்து, சாமானியர்கள் சிரமப்படக்கூடாது என்ற நோக்கில் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற அத்தம்பதியிடம் நாங்கள் வலியுறுத்தினோம். அதன்பின் ஆட்சியரிடம் அவர்கள் அனுமதி பெற்றனர். அதைத் தொடர்ந்து மின்விசிறிகள் பெற்றுக் கொள்ளப்பட்டன,'' என்றார்.

அந்த மருத்துவமனைக்கு 100 மின்விசிறிகளை நன்கொடை வழங்கிய தம்பதிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
கிருமித்தொற்று