புத்ராஜெயா: ஆஸ்ட்ராஸெனகா கொவிட்-19 தடுப்பூசி தொடர்பில் ரத்தக் கட்டி பிரச்சினைகள் எழுந்துள்ளதையடுத்து, கோலாலம்பூர், சிலாங்கூரில் உள்ள சில சிறப்பு தடுப்பூசி நிலையங்களில் அந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள விரும்புவோருக்கு மட்டுமே அது போடப்படும் என்று அறிவியல் அமைச்சர் கைரி ஜமாலுதீன் குறிப்பிட்டார். இதன் மூலம் மலேசியாவின் முக்கிய தடுப்பூசித் திட்டத்திலிருந்து அந்தத் தடுப்பூசி விடுவிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
மலேசியாவில் தற்போது 268,000 தடவை போடக்கூடிய அளவுக்கு ஆஸ்ட்ராஸெனகா தடுப்பூசி உள்ளது. கடந்த வாரம் மலேசியாவுக்கு அது சென்று சேர்ந்தது. அனைத்துலக அளவில் இந்தத் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒரு மில்லியன் மக்களில் நான்கு பேருக்கு மட்டுமே ரத்தக் கட்டி பிரச்சினை ஏற்பட்டிருப்பதாக திரு கைரி கூறினார்.
புதிதாக 3,142 பேருக்குத் தொற்று
நேற்று மலேசியாவில் மேலும் 3,142 புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவானதையடுத்து அங்கு தொற்று கண்டோரின் எண்ணிக்கை 401,593 ஆக அதிகரித்தது. சிலாங்கூரில் ஆக அதிகமாக 1,019 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா குறிப்பிட்டார். நேற்று அங்கு கொரோனா தொற்றால் 15 பேர் உயிரிழந்ததை அடுத்து அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,477 ஆனது.
மேலும் அதிக பள்ளிகள் மூடல்
இதற்கிடையே, மலேசியாவின் சிலாங்கூரில் நேற்று மேலும் 30 பள்ளிகள் கொரோனா தொற்று காரணமாக இரு நாள்களுக்கு மூடப்பட்டதாக சிலாங்கூர் கல்வித் துறை தெரிவித்தது. பள்ளிகளைக் கிருமிநாசினி கொண்டு சுத்திகரிக்கவும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணவும் பள்ளிகள் மூடப்படுவது உதவும் என்றும் அமைச்சு தெரிவித்தது. நெகிரி செம்பிலானிலும் 13 பள்ளிகள் இரு நாள்களுக்கு மூடப்
படுவதாகவும் நேற்று தெரிவிக்கப்பட்டது.

