யங்கூன்: அதிபர் யு வின் மயின்ட், திருவாட்டி ஆங் சான் சூச்சி உட்பட அரசியல் கைதிகளை எந்த நிபந்தனையுமின்றி ராணுவம் விடுவிக்கும் வரை பேச்சுவார்த்தைக்கு இணங்கப் போவதில்லை என தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட மியன்மாரின் தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கம் ஆசியான் அமைப்பிடம் தெரிவித்துள்ளது.
ராணுவ ஆட்சிக்கு எதிராக மியன்மாரில் நடந்து வரும் கலவரங்களை முடிவுக்குக் கொண்டுவர ஆசியான் முயற்சி எடுத்து வருகிறது. கடந்த வாரம் ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசியான் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட தீர்வுகளை ராணுவம் ஏற்றுக்கொள்ளவில்லை. அவை கவனமாகப் பரிசீலிக்கப்படும் என்று அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட மியன்மார் ராணுவத் தலைவர் மின் அவுங் லைங் பின்னர் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, மியன்மார் ராணுவத்தின் மீது கூடுதல் தடைகளை விதிக்குமாறு அமெரிக்க செனட் உறுப்பினர்கள் சிலர் நேற்று முன்தினம் அதிபர் ஜோ பைடனிடம் வலியுறுத்தினர். அமெரிக்காவில் உள்ள எரிபொருள் நிறுவனங்களிலிருந்து மியன்மார் அரசாங்கத்துக்கு வழங்கப்படும் உரிமைத் தொகையை நிறுத்தி வைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் முன் வைத்தனர். மியன்மாருடனான தொடர்பைத் துண்டிக்குமாறு செவ்ரான், டோட்டல் எரிபொருள் நிறுவனங்களை மனித உரிமை குழுக்கள் கேட்டுக்கொண்டன.