செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
0c28d32d-ba62-4994-9997-48d3ce46836e
-

பரிசோதனையில் பயன்படுத்திய பஞ்சு மறுபயன்பாடு; விசாரணை

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் அரசாங்க மருத்துவ நிறுவனமான கிமியா ஃபார்மாவின் அதிகாரிகள் விமானங்களில் வந்திறங்குவோருக்கு விமான நிலையங்களில் செய்யப்படும் ஆன்டிஜன் ரேப்பிட் கொவிட்-19 பரிசோதனைகளின்போது, ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட பஞ்சு மீண்டும் பயன்படுத்தப்பட்டதன் தொடர்பில் போலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பயணிகளிடமிருந்து எச்சில், சளி மாதிரியைப் பரிசோதனைக்காக எடுக்கும் பஞ்சுடன் கூடிய குச்சியைக் கழுவிவிட்டு மீண்டும் பயன்படுத்தியதாகவும் அதற்கான நோக்கம் தெரியவில்லை எனவும் போலிசார் தெரிவித்தனர்.

'தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்

முகக்கவசம் அணியத் தேவையில்லை'

வாஷிங்டன்: உடற்பயிற்சி, உணவருந்துதல், சிறிய குழுக்களாக வெளிப்புற நடவடிக்கைகள் போன்றவற்றில் முழுவதுமாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் முகக்கவசம் அணியத்தேவையில்லை என அமெரிக்காவின் மத்திய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உள்ளரங்குகளிலும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் முகக்கவசங்கள் அல்லது சமூக இடைவெளியின்றி பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் கூட்டம் அதிகமிருக்கும் பூங்காக்கள், கடைத்தொகுதிகள், தேவாலயங்கள் போன்றவற்றில் முகக்கவசம் அவசியம் என அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிலையங்கள் தெரிவித்துள்ளன.

'முதல் தடுப்பூசி போட்டவர்கள்

தொற்றைப் பரப்பும் சாத்தியம் குறைவு'

லண்டன்: ஃபைசர், ஆஸ்ட்ராஸெனகா தடுப்பூசிகளின் முதல் ஊசியைப் போட்டுக்கொண்டாலே, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவர் மூலம் அவரது குடும்பத்தினருக்குத் தொற்று ஏற்படும் சாத்தியம் 50% குறைவு என நேற்று முன்தினம் 'பப்ளிக் ஹெல்த் இங்கிலாந்து' ஆய்வில் தெரியவந்துள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுடன் ஒப்பிடுகையில், முதல் தடுப்பூசி போட்டுக்கொண்ட 3 வாரங்களுக்குப் பிறகு கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் மூலம் அவர்களின் குடும்பத்தாருக்கு தொற்று ஏற்படுவது 38 முதல் 49 விழுக்காடு வரை குறைந்ததாக ஆய்வு தெரிவித்தது.