சுவாசப் பிரச்சினைக்காக மருத்துவ விடுப்பில் இருந்தும் வெளியே சென்றதாக மாது மீது குற்றச்சாட்டு

சுவாசப் பிரச்சினைக்காக மருத்துவ விடுப்பில் இருந்தும் வெளியே சென்றதாக மாது மீது குற்றச்சாட்டு

2 mins read
d88f398d-a1ae-41f7-89b6-951966101508
சிங்கப்பூர் நிரந்தரவாசியான ஃபூ, கடந்த ஆண்டு ஜூலை 14க்கும் 17க்கும் இடைப்பட்ட நாட்களில் பிடோக் நார்த் ஸ்திரீட் 2ல் உள்ள ஒரு புளோக்கிலிருந்து பிடோக் நார்த் ரோடு புளோக் 184ல் அமைந்துள்ள 'பிசிஎஃப் ஸ்பார்க்கல்டோட்ஸ்' பாலர் பள்ளிக்கு மகனுடன் சென்று வந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சுவாசப் பிரச்சினைக்காக மருத்துவ விடுப்பில் இருந்த 24 வயது மலேசியர் மிஷெல் ஃபூ ஷி சிங், தன் மகனைப் பாலர் பள்ளிக்கு அழைத்துச் சென்றதுடன் பள்ளி முடிந்து வீட்டுக்கு அழைத்தும் வந்திருந்தார்.

பிறருக்குத் தொற்றைப் பரப்பும் அபாயத்தை ஏற்படுத்தியதால் தொற்றுநோய்த் தடுப்புச் சட்டத்தின்கீழ் இன்று (ஏப்ரல் 29) அந்த மாது மீது ஐந்து குற்றச்சாட்டுகள் பதிவாகின.

ஃபூவுக்குத் தரப்பட்ட மருத்துவ விடுப்பு, சென்ற ஆண்டு ஜூலை 14 முதல் 18ஆம் தேதி வரையிலானது. அதன்படி ஃபூ எங்கும் போகாமல் வீட்டிலேயே இருக்கவேண்டும்.

ஆனால், சிங்கப்பூர் நிரந்தரவாசியான ஃபூ, ஜூலை 14க்கும் 17க்கும் இடைப்பட்ட நாட்களில் பிடோக் நார்த் ஸ்திரீட் 2ல் உள்ள ஒரு புளோக்கிலிருந்து பிடோக் நார்த் ரோடு புளோக் 184ல் அமைந்துள்ள 'பிசிஎஃப் ஸ்பார்க்கல்டோட்ஸ்' பாலர் பள்ளிக்கு மகனுடன் சென்று வந்தார்.

மேலும், மெக்பெர்சன் லேனில் உள்ள ஒரு வீவக புளோக்கிற்கு 'கிராப்' வாகனத்தில் அவர் சவாரி செய்திருந்தார்.

அதுமட்டுமல்லாமல் 'கிரேட் வெர்ல்ட் சிட்டி' கடைத்தொகுதிக்கும் சென்று அங்கு அமைந்துள்ள திரையரங்கில் ஜூலை 17ஆம் தேதி படமும் பார்த்துள்ளார்.

அதே நாளன்று டாக்சியில் சவாரி செய்து பிடோக் நார்த்துக்குத் திரும்பியும் உள்ளார்.

பிடோக் நார்த் வட்டாரத்தில் உள்ள வேறொரு 'பிசிஎஃப் ஸ்பார்க்கல்டோட்ஸ்' பாலர் பள்ளியில் கொவிட்-19 கிருமித்தொற்றுக் குழுமம் ஒன்று சென்ற ஆண்டு மார்ச் மாதம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து ஃபூ இவ்வாறு செய்திருந்தார் என்று கூறப்படுகிறது. ஃபூ மீதான வழக்கு மீண்டும் ஜூன் 10ஆம் தேதி தொடரும்.

நிரூபணமாகும் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் ஆறு மாத சிறைத் தண்டனை அல்லது $10,000 வரையிலான அபராதம் ஃபூவுக்கு விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்