வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் முதல் உரையாற்றிய அதிபர் ஜோ பைடன், பல பிரச்சினைகளின் தொடர்பில் சீனாவைக் குறிப்பிட்டு பேசியதுடன் சச்சரவு
களைத் தவிர்க்கும் நோக்கில் இந்தோ-பசிபிக் வட்டாரத்தில் அமெரிக்க ராணுவம் வலுவான நிலையில் இருப்பதை உறுதி செய்யப்போவதாகவும் தொழில்நுட்ப மேம்பாடு, வர்த்தகம் ஆகியவற்றை வலுப்படுத்தவும் உறுதியளித்தார்.
தமது உரையின்போது சீனாவுடனான போட்டித்தன்மையைப் பற்றி குறிப்பிட்ட அவர், அந்நாட்டு வெளியுறவுக் கொள்கை சவால்கள் பற்றியும் குறிப்பிட்டார். மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரம் ஆகியவற்றுக்கான தனது நிலைப்பாட்டிலிருந்து அமெரிக்கா பின்வாங்காது என்றும் அவர் குறிப்பிட்டார். ஆனால், ஒரு நாட்டின் மீது ஜனநாயகக் கொள்கைகளைத் திணிப்பது பிரிவினையை உருவாக்கி, பதற்றத்தை அதிகரித்து, நிலைத்தன்மையைக் குலைத்து
விடும் என சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் வாங் வென்பின் நேற்று அமெரிக்காவை எச்சரித்தார்.
கடந்த புதன்கிழமை அமெரிக்க நாடாளுமன்றத்தில் பேசிய அதிபர் ஜோ பைடன், மன்ற உறுப்பினர்கள் அனைவரும் தம்முடன் இணைந்து செயல்பட வேண்டுமென கேட்டுக்கொண்டதுடன் 4 டிரில்லியன் அமெரிக்க டாலர் (S$5.3 டிரில்லியன்) பொருளியல் திட்டம் சீனாவுடன் அதிக போட்டித்தன்மை
யுடன் அமெரிக்கா திகழ உதவும் என்றார்.
பணக்கார அமெரிக்கர்கள், நிறுவனங்களுக்குக் கூடுதல் வரி விதித்து, அந்தத் தொகையை உள்கட்டமைப்பு, கல்வி, குறைந்த மற்றும் நடுத்தர வருமானக் குடும்பங்களுக்கான முதலீட்டு நிதியாக்கும் திட்டம் பற்றியும் அவர் எடுத்துரைத்தார்.
அமெரிக்கத் தேர்தல்கள் மற்றும் இணையப் பாதுகாப்பு மீதான தாக்குதல்களின் தொடர்பில் ரஷ்யா விளைவுகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்றார் அவர்.

