யங்கூன்: மியன்மாரின் இரண்டு ஆகாயப்படைத் தளங்கள் மீது அடையாளம் தெரியாதவர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் அந்தத் தாக்குதல்களுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை எனவும் செய்தியாளர் கூட்டம் ஒன்றில் மியன்மார் ராணுவம் தெரிவித்தது.
மெக்வே நகரின் மத்தியில் உள்ள ஆகாயப்படைத் தளத்தின் மீது நேற்று அதிகாலை வேளையில் நான்கு ராக்கெட்டுகள் ஏவப்பட்டதாகவும் அவற்றில் மூன்று பண்ணைகளின் மீதும் ஒன்று சாலையின் மீதும் விழுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆகாயப் படைத்தளத்தில் உள்ள கட்டடம் ஒன்று லேசாக பாதிக்கப்பட்டது எனவும் உயிரிழப்புகள் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
வெடித்தாக்குதல்களை அடுத்து அந்த ஆகாயப்படைத் தளத்துக்கு வெளியே சாலைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாகவும் அது குறிப்பிட்டது.
மெய்டிலா எனும் இடத்தில் உள்ள நாட்டின் முக்கிய ஆகாயப்
படைத் தளத்தில் ஐந்து ராக்கெட்டுகள் ஏவப்பட்டதாகவும், சேதம் ஏதுமில்லை என்றும் தெரிவிக்கப் பட்டது.
தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யபப்டுவர் எனவும் ராணுவத் தரப்பில் கூறப்பட்டது.
வெடிச்சத்தத்தைத் தொடர்ந்து ராக்கெட்டுகள் சீறிப் பாய்வது போன்ற சத்தம் உள்ளடக்கிய காணொளி ஒன்றை அந்தப் பகுதிக்கு அருகில் இருந்த செய்தியாளர் தான் வின் லைங் வெளியிட்டார் என்று கூறப்பட்டது. ஆனால் அந்தக் காணொளியின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை என ராய்ட்டர்ஸ் குறிப்பிட்டது.

