வீரர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கிய ஜோக்கோவி
ஜகார்த்தா: பாலிக்கு அருகே கடற்பகுதியில் மூழ்கிய நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த அதிகாரிகளின் குடும்பத்தாரை கிழக்கு ஜாவாவில் உள்ள சிடோர்ஜோ பகுதியில் உள்ள ஜுவாண்டா கடற்படை விமானத் தளத்தில் சந்தித்த அதிபர் ஜோக்கோ விடோடோ அவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன் இழப்பீடுகளும் வழங்கினார். உயிரிழந்த 53 வீரர்களின் பதவி ஒரு படி அதிகரிக்கப்பட்டதுடன் அவர்களது பிள்ளைகளின் படிப்புச் செலவை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும் என்றும் உயிரிழந்தோரின் மனைவிகளுக்கு வீடுகள் கட்டித் தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
3 பில்லியன் தடுப்பூசிகள் தயாரிக்க மொடர்னா இலக்கு
கேம்ப்ரிட்ஜ்: அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பல தொழிற்சாலைகளில் புதிய முதலீடுகளைச் செய்திருக்கும் மொடர்னா நிறுவனம் அடுத்த ஆண்டு கிட்டத்தட்ட 3 பில்லியன் தடுப்பூசிகளைத் தயாரிக்க இலக்கு கொண்டுள்ளது. நோர்வுட்டில் இருக்கும் அந்த நிறுவனத்தின் மருந்து உற்பத்தி தொழிற்சாலை அமெரிக்கச் சந்தைக்கு தடுப்பூசியை வழங்குகிறது. சுவிட்சர்லாந்தில் உள்ள லோன்ஸா குழுமம் ஏஜி, ஸ்பெயினில் உள்ள லேபராட்டரிஸ் ஃபார்மாசூட்டிகோஸ் ரோவி எஸ்ஏ போன்ற அந்த நிறுவனப் பங்காளிகள் வெளிநாடுகளுக்கு தடுப்பூசி மருந்துகளைத் தயாரிக்கின்றன. இவை அனைத்திலும் தயாரிப்பை இரு மடங்காக்க அந்நிறுவனம் திட்டமிடுகிறது.
மலேசியா: 3,332 பேருக்கு தொற்று
கோலாலம்பூர்: மலேசியாவில் நேற்று புதிதாக 3,332 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிலாங்கூரில் ஆக அதிகமாக 1,083 பேருக்குத் தொற்று பதிவானது. சரவாக்கில் 522, கிளந்தானில் 401, கோலாலம்பூரில் 359, ஜோகூரில் 207 என தொற்று எண்ணிக்கை பதிவானது. நேற்று தொடர்புகள் மற்றும் பல்லூடகத் துறை அமைச்சர் சைஃபுதீன் அப்துல்லாவுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்றும் சில பள்ளிகள் கொரோனா தொற்று காரணமாக இரு நாள்களுக்கு மூடப்பட்ட நிலையில், கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் புதிய நோயாளிகளுக்கு இடம் இல்லை என்று கூறப்பட்டது.

