தாய்லாந்து: மியன்மாரில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி ஆட்சிக்கவிழ்ப்பு நடந்தது. அதைக் கண்டித்து நாடு முழுதும் ஜனநாயக ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அந்நாட்டின் கேரன் சிறுபான்மையின மக்களுக்கு ஆதரவான கிளர்ச்சியாளர்களுக்கும் ராணுவத்தினருக்கும் இடையேயான சண்டை தீவிரமடைந்துள்ளது.
இதன் காரணமாக மியன்மாரில் தாய்லாந்து எல்லைப் பகுதியில் வாழும் ஆயிரக்கணக்கான கேரன் இன மக்கள் உயிருக்கு அஞ்சி தாய்லாந்திற்கு அடைக்கலம் நாடிச் சென்ற வண்ணம் உள்ளனர்.
"பர்மாக்காரர்கள் எங்களைக் கண்டால் சுட்டுக் கொன்றுவிடுவார்கள். அதனால்தான் நாங்கள் குடும்பத்துடன் நாட்டை விட்டு ஓட வேண்டியிருந்தது," என்று தாய்லாந்துக்கு அடைக்கலம் நாடி வந்த மக்கள் கூறுவதாக கேரன் கிராமவாசியான திரு சு வா என்பவர் ராய்ட்டர்சிடம் கூறினார். "தாய்லாந்து எல்லையில் உள்ள சல்வீன் ஆற்றைக் கடந்துதான் நாங்கள் தாய்லாந்தை அடைந்தோம்," என்றார் திரு சு வா.
மியன்மாரில் சல்வீன் ஆற்றோரப் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் தஞ்சம் அடைந்த வண்ணம் உள்ளனர். அப்பகுதியில் ராணுவத்தினருக்கும் கேரன் போராளிகளுக்கும் சண்டை மூளும்போது அங்குள்ள மக்கள் ஆற்றின் குறுக்கே நடந்துசென்று தாய்லாந்துக்கு அடைக்கலம் நாடிச் செல்கின்றனர் என்று கேரன் சிறுபான்மையின ஆதரவுக் கட்டமைப்புக்குழு ஒன்று தெரிவித்தது.
வரும் நாட்களில் 8,000க்கு மேற்பட்ட கேரன் இனத்தவர் சல்வீன் ஆற்றைக் கடந்து தாய்லாந்துக்கு அடைக்கலம் நாடிச் செல்லவிருக்கின்றனர்.
அவ்வாறு தாய்லாந்துக்கு வரும் கேரன் இன மக்களுக்கு தாய்லாந்து ராணுவம், அவர்களைத் திருப்பி அனுப்பாமல் காப்பாற்றும் என நம்புவதாக அந்த அமைப்பு தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.

