சிங்கப்பூரர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்ட $100 மதிப்புள்ள 'சிங்கப்பூரை மீண்டும் ரசிப்பதற்கான' பற்றுச்சீட்டைப் பயன்படுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
ஜூன் மாதத்தில் காலாவதியாகவிருந்த அந்தப் பற்றுச்சீட்டுகளை இனி இவ்வாண்டு டிசம்பர் வரை பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரையோரப் பூந்தோட்டத்தில் நேற்று ஓவியக் கண்காட்சியைத் தொடங்கி வைத்துப் பேசிய வர்த்தக தொழில் துணை அமைச்சர் எல்வின் டான், "உள்ளூர் சுற்றுலாத் தளங்களை சிங்கப்பூரர்கள் சுற்றிப்பார்க்க இந்த நீட்டிப்பு உதவும்," என்றார்.
கொள்ளைநோய் பரவும் சூழலில் தேவையற்ற நெரிசலைத் தவிர்க்க வேண்டிய சூழ்நிலையில் வெவ்வேறு இடங்களுக்கு சிங்கப்பூரர்கள் செல்ல இது வாய்ப்பு அளிக்கிறது என்றும் அவர் கூறினார்.
கடந்த ஆண்டு ஜூலையில் $320 மில்லியன் மதிப்புள்ள அந்த இயக்கம் தொடங்கப்பட்டது.
கிருமிப்பரவலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள உள்ளூர் சுற்றுலாவுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டது.
பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட சிங்கப்பூரர்கள் அனைவருக்கும் நூறு வெள்ளி வரை செலவழிக்கும் வகையில் பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன.
இதனைப் பயன்படுத்தி சிங்கப்பூரர்கள் உள்ளூரின் முக்கிய, பிரபலமான ஹோட்டல்களில் தங்கலாம் அல்லது உள்ளூர் சுற்றுலாத் தளங்களைச் சுற்றிப் பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட சிங்கப்பூரர்கள், தங்களின் பற்றுச்சீட்டுகளை ஒரு முறையாவது பயன்படுத்தியுள்ளனர் என்று சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் நேற்று தெரிவித்தது. 1.3 மில்லியன் பரிவர்த்தனைகள் அவர்கள் மூலம் செய்யப்பட்டுள்ளன.
ரீடிஸ்கவர் பற்றுச்சீட்டுத் திட்டம் மூலம் சிங்கப்பூரின் சுற்றுப்பயணம் தொடர்பான வர்த்தகங்களுக்கு $200 மில்லியனுக்கு மேல் வழங்கப்பட்டுள்ளது.

