லிஸ்பன்: போர்ச்சுக்கல் இன்று முதல் ஸ்பெயின் நாட்டுக்கான தனது எல்லையைத் திறக்கிறது. கொவிட்-19 கட்டுப்பாட்டுத் தளர்வின் நான்கு மற்றும் ஐந்தாவது கட்ட நடவடிக்கையாக இது செயல்படுத்தப்படுவதாக அந்நாட்டு பிரதமர் அண்டோனியோ கோஸ்டா தெரிவித்தார். கடைசிக் கட்டத் தளர்வு திட்டமிடப்பட்டதைக் காட்டிலும் 48 மணிநேரத்திற்கு முன்னதாகவே தொடங்குகிறது என அவர் தெரிவித்தார். இதன் மூலம் திருமணம், ஒன்றுகூடல் நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கும் அந்நாடு அனுமதித்துள்ளது. அதேபோல் உள்ளரங்கு மற்றும் வெளிப்புற விளையாட்டு நடவடிக்கைகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 19 ஆம் தேதி மூன்றாம் கட்டத் தளர்வில் கடைத்தொகுதிகள், உயர்நிலைப் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், உணவகங்கள், வெளிப்புற நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு அந்நாடு அனுமதி அளித்தது. வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளுக்கான கட்டுப்பாடு தொடர்வதாகவும் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் தங்களுக்குத் தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழைப் பெற்றிருக்கவேண்டும் அல்லது வருகை தந்தபின் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் திரு கோஸ்டா கூறினார். தொற்று அதிகமுள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார். போர்ச்சுக்கலில் கொவிட்-19 தொற்றுக்கு சுமார் 17,000 பேர் பலியாகிவிட்டனர்.

