ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் கொவிட்-19 மரணங்கள் 400,000ஐத் தாண்டிவிட்டது.
தடுப்பூசி மருந்து பற்றாக்குறை காரணமாக தடுப்பூசி போடும் நடவடிக்கையை நாடளாவிய முறையில் செயல்படுத்த முடியாமல் அந்நாடு தவித்து வருகிறது.
2020ஆம் ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் பிரேசிலில் ஆக அதிகமான தொற்று மரணங்கள் பதிவாகியுள்ளன.
கடந்த வியாழக்கிழமை மட்டும் 3,001 தொற்று மரணங்கள் பதிவானதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த எண்ணிக்கையுடன் சேர்த்து இதுவரை அங்கு 401,186 பேரை கொவிட்-19 தொற்று பலிவாங்கியுள்ளது.
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இங்குதான் அதிக தொற்று மரணங்கள் பதிவாகியுள்ளன.
பிரேசிலில் 200,000ஆக இருந்த தொற்று மரணங்கள் இரண்டு மாதங்களில் 300,000 ஆகவும் அடுத்த ஒரு மாதத்தில் 400,000 ஆகவும் அதிவேகத்தில் அதிகரித்துள்ளது.
சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படாததும், அதிகமான உருமாறிய கொரோனா கிருமிப் பரவல், இலக்கை எட்டாத தடுப்பூசி நடவடிக்கைகள் ஆகியவையே தொற்று அதிகரிப்புக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. பிரேசிலின் 20 மாநிலங்களில் 80 விழுக்காட்டு கொவிட்-19 நோயாளிகள் தீவிர கண்காணிப்புப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் கொவிட்-19 தொற்று அதிகரித்துள்ளதை அடுத்து உலகில் கொவிட்-19 தடுப்பூசிக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அந்நாட்டில் இருந்து தடுப்பூசி மருந்து வரவழைப்பதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
தடுப்பூசி பெறுவதற்கு பல நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களை அணுகியுள்ளதாக சுகாதார அமைச்சர் மார்சிலோ கொய்ரோகா, அமைச்சரவையில் நேற்று கூறினார்.
சீனாவில் இருந்து வரவேண்டிய தடுப்பூசி மருந்துகள் வந்து சேர்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. அதனால் தடுப்பூசி நடவடிக்கை பெரிதும் பாதிக்கப்படக்கூடும் என்று அமைச்சர் மார்சிலோ கூறினார்.
ஜூலை மாத இறுதிக்குள் 159 மில்லியன் கொரோனா தடுப்பூசி மருந்துகளை பல நிறுவனங்களிடம் இருந்துபெறவுள்ளதாகவும் அவர் கூறினார். பிரேசிலின் பல நகரங்களில் தடுப்பூசி பற்றாக்குறையால் ஆயிரக்கணக்கானோருக்கு இரண்டாவது தடுப்பூசி போடமுடியாமல் அந்நாடு தத்தளிக்கிறது.

