தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கொரோனா கிருமித்தொற்றுக்கு இந்திய ஆணழகன் மரணம்

2 mins read
64df1009-3347-4516-9e7c-cced297eaa45
சிகிச்சை பலனின்றி ஜெகதீஷ் உயிரிழந்திருப்பது பலருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. படம்: இந்திய ஊடகம் -

இந்திய ஆணழகன் ஜெகதீஷ் லாட் கொரோனா கிருமித்தொற்று பாதிப்பால் நேற்று (ஏப்ரல் 30) உயிரிழந்தார். இவருக்கு வயது 34.

இருமுறை இந்திய ஆணழகன் பட்டம் வென்ற இவர், உலக சாம்பியன்ஷிப் ஆணழகன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவர். உடலை பேணுவதில் அதிக ஆர்வம் கொண்ட ஜெகதீஷ், உள்ளூர் போட்டி, மாநில அளவிலான போட்டி என அனைத்து இந்திய ஆணழகன் போட்டியில் தங்கப் பதக்கமும் வென்றார்.

நவி மும்பையில் வசித்துவந்த ஜெகதீஷ், அண்மையில்தான் குஜராத் மாநிலம், வடோதராவில் குடியேறினார். அங்கு உடற்பயிற்சிக்கூடம் நடத்தி வந்தார் இவர்.

இந்தியா முழுவதும் தீவிரமாக பரவி வரும் கொரோனா இரண்டாவது அலை ஜெகதீஷையும் விட்டுவைக்கவில்லை.

இந்நிலையில், ஜெகதீஷுக்கு கொரோனா உறுதியானதையடுத்து, கடந்த நான்கு நாட்களாக வடோதரா மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார்.

இவரது மனைவி மற்றும் மகளுக்கும் கொரோனா தொற்று உறுதியானதால் அவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ஜெகதீஷ் உயிரிழந்திருப்பது பலருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவில் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு கொடுக்கப்படும் ஆதரவு மற்ற விளையாட்டுகளுக்கு அதிகம் கொடுக்கப்படாதது ஜெகதீஷ் வாழ்விலும் உண்மையாகியுள்ளது.

தனது வாழ்க்கையில் உரிய அரசுப்பணி கிடைக்காமல் வறுமையால் வாடி வீட்டு வாடகைக்கூட கொடுக்கமுடியாத நிலைக்கு இவர் தள்ளப்பட்டதாக 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' செய்தி இணையத்தளம் கூறியது.

ரயில்வே துறையில் வேலைக்கு முயற்சி செய்து வந்த ஜெகதீஷுக்கு மும்பை மாநகராட்சியில் பணி கிடைத்தும் வயது காரணமாக அது நிலைக்கவில்லை. இந்தியாவில் கடந்த ஆண்டு 'லாக்டவுன்' பிரச்சினை காரணமாக உடற்பயிற்சி செய்வதையும் ஜெகதீஷ் விட்டுவிட்டார்.

வீட்டு வாடகை கொடுக்காததால் அவர் வீட்டை காலி செய்து வேறு ஊர் போகவும் உரிமையாளர் அனுமதிக்கவில்லை. இதனால் இவர் வடோதராவிலேயே தங்கும் நிலை ஏற்பட்டது.

ஜெகதீஷின் மரணம் குறித்து இந்திய ஆணழகன் சமீர் டபில்கர் 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' இணையத்தளத்திடம் கூறுகையில், "அதிக நோயெதிர்ப்புச் சத்தி உடைய பாடிபில்டர்சையும் கொவிட்-19 தொற்றுகிறது என்றால், இந்த நோய் யாரை வேண்டுமானாலும் பாதிக்கலாம். பாடிபில்டர்கள் கடவுள்கள் அல்ல. நாங்களும்கூட கொவிட்-19 தொற்றால் மிக மோசமாகப் பாதிக்கப்படலாம்," என்று கூறினார்.

குறிப்புச் சொற்கள்
இந்தியாகிருமித்தொற்று