மெக்சிகோ சிட்டி: மெக்சிகோ நகரில் பரபரப்பான சாலையின் மீது மேம்பால ரயில்பாதை இடிந்து விழுந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 20 பேர் உயிரிழந்தனர், 49 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மெக்சிகோ நகரின் தென்
கிழக்குப் பகுதில் அமைந்துள்ள ஓலிவோஸ் ரயில் நிலையத்துக்கு அருகில் அந்த மேம்பால ரயில் பாதை சாலையில் சென்றுகொண்டிருந்த கார்களின் மீது விழுவதைக் காட்டும் காணொளிகளை உள்ளூர் ஊடகங்கள் காட்டின. உள்ளூர் நேரப்படி இரவு 10.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்பட்டது.
இடிந்து விழுந்த பாலத்தின் கீழே சிக்கிய கார் ஒன்றிலிருந்து ஆடவர் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் எழுவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.