கொவிட்-19 தொற்றிலிருந்து மாட்டுச் சாணம் பாதுகாக்காது: மருத்துவர்கள் எச்சரிக்கை

கொவிட்-19 தொற்றிலிருந்து மாட்டுச் சாணம் பாதுகாக்காது: மருத்துவர்கள் எச்சரிக்கை

2 mins read
6847bbd4-63b6-4625-a4ce-ad51a031dfe8
அகமதாபாத்தில் உள்ள ஸ்ரீ சுவாமிநாராயண் குருகுலத்தில் மாட்டுச் சாணம், கோமியம் கலந்த கலவையை இவர்கள் உடலில் பூசிக் கொள்கின்றனர். படம்: ராய்ட்டர்ஸ் -

மாட்டுச் சாணத்தைப் பயன்படுத்துவதால் நோய்த்தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை குறித்து இந்திய மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

அதற்கு தகுந்த ஆதாரம் இல்லை. இந்த நடைமுறை இதர நோய்களையும் பரப்பும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்தியாவை உலுக்கிவரும் கொரோனா கிருமித்தொற்று இது வரை 22.66 மில்லியன் மக்களை பாதித்துள்ளது. 246,116 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

ஆனால் உண்மையான எண்ணிக்கை ஐந்து முதல் பத்து மடங்குக்கு மேல் இருக்கும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட மருத்துவமனைகளில் படுக்கைகள், உயிர்வாயு, மருந்து கிடைக்காமல் மக்கள் உயிருக்குப் போராடி வருகின்றனர். இதனால் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.

மேற்கு இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் சிலர் வாரத்திற்கு ஒரு முறை மாட்டுக் கொட்டகைக்குச் சென்று தங்களுடைய உடல் முழுவதும் மாட்டுச் சாணத்தையும் கோமியத்தையும் பூசிக் கொள்கின்றனர். இத்தகைய வைத்தியம் கொரோனா கிருமித்தொற்றிலிருந்து பாதுகாக்கும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

இந்தியாவில் மக்களில் பலர் பல நூற்றாண்டுகளாக மாட்டுச் சாணத்தைப் பயன்படுத்தி வீட்டை சுத்தம் செய்து வந்துள்ளனர். கிராமப்புறங்களில் வீட்டின் தரைகளில் மாட்டுச் சாணத்தைப் பூசி மெழுகுவது வழக்கம். இதனால் புழு, பூச்சிகள், கிருமி அண்டாது என்பது கிராம மக்களின் பாரம்பரிய நம்பிக்கை. வழிபாடுகளிலும் பசு மாட்டின் கோமியம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் மாட்டுச் சாணம் கொரோனா கிருமித் தொற்றிலிருந்தும் பாதுகாக்கும் என்று சிலர் நம்புகின்றனர்.

"இங்கு மருத்துவர்களும் மாட்டுச் சாணம் வைத்தியம் செய்து கொள்கின்றனர். இந்த வைத்தியம் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று அவர்கள் நம்புகின்றனர். இதன் பிறகு மருத்துவர்கள் அச்சமின்றி நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கின்றனர்," என்று மருந்து நிறுவனத்தின் இணை நிர்வாகி மணிலால் போரிசா கூறினார்.

குறிப்புச் சொற்கள்
இந்தியாகிருமித்தொற்றுகொவிட்-19