யங்கூன்: மியன்மாரில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தைக் கவிழ்த்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள ராணுவம், அதிரடியாக 39 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
குண்டுவெடிப்பு, தீ மூட்டுவது, போராளிகளிடம் ராணுவப் பயிற்சியைப் பெற முயற்சி செய்தது ஆகியவற்றின் தொடர்பில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்தது.
கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. அப்போது முதல் நாடு முழுவதும் உள்ள நகரங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்து வருகின்றன. சில சமயங்களில் அரசாங்க அலுவலகங்களும் ராணுவ வளாகங்களும் குறி வைக்கப்படுகின்றன.
இதற்கு இதுவரை எந்த அமைப்புகளும் பொறுப்பு ஏற்கவில்லை. ஆனால் நாட்டின் நிலைத்தன்மையைச் சீர்குலைக்கும் செயல் என்று ராணுவம் கூறி வருகிறது.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 48 கையெறி குண்டு, இருபது வெடிக் குச்சிகள் உள்ளிட்ட பொருட்களை ராணுவம் கைப்பற்றியுள்ளதாக மியன்மாரின் ஊடகமான குளோபல் நியூலைட் தெரிவித்தது.
கிழக்கில் உள்ள காயா மாநிலத்தில் போராளி அமைப்புகளுடன் சேர்ந்து பயிற்சி பெற முயற்சி செய்த சிலரும் கைது செய்யப்பட்டதாக அந்த ஊடகம் குறிப்பிட்டது.
நாளேடு அடையாளம் கண்டுபிடித்த சந்கேக நபர் காண்ட் சித்துவின் உறவினர், பாதுகாப்புப் படையினர் வீட்டை சோதனையிட்டபோது ஆயுதங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றார்.
காண்ட் சித்து ஆரம்பத்தில் போராட்டங்களில் ஈடுபட்டதாகவும் அதன் பிறகு அதிகாரிகளின் ஒடுக்குமுறைக்குப் பிறகு நிறுத்திக் கொண்டார் என்றும் அவரது குடும்ப உறுப்பினர் பெயர் தெரிவிக்காமல் தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டங்களை ராணுவம் நசுக்க ஆரம்பித்ததும் ஜனநாயக ஆதரவாளர்களில் சிலர், எல்லையோரங்களில் அதிக தன்னாட்சி கேட்டு பல ஆண்டுகளாக போராடி வரும் சிறுபான்மை குழுக்களிடம் பயிற்சி பெற விரும்பினர்.
ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றி நூறுவது நாளை நினைவுப்படுத்தும் வகையில் யங்கூன், மத்திய வட்டாரமான பாகோ உள்ளிட்ட வர்த்தக மையங்களில் பேரணியும் மெழுகுவத்தி ஊர்வலமும் நடைபெற்றுள்ளன.
ராணுவத்துக்கு எதிராக மியன்மாரின் உண்மையான அதிகாரமாக தன்னை அறிவித்துக்கொண்ட தேசிய ஒற்றுமை அரசாங்கத்துக்கு பல ஜனநாயக ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.
கடந்த வாரம், மக்கள் தற்காப்புப் படை அமைக்கப்படும் என்று தேசிய ஒற்றுமை அரசாங்கம் அறிவித்திருந்தது. ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு மியன்மார் பாதுகாப்புப் படை 783 பேரைக் கொன்றுவிட்டதாகவும் 3,800 பேரை சிறையில் அடைத்து விட்டதாகவும் அரசியல் கைதிகள் கண்காணிப்புக் குழுவினர் கூறுகின்றனர்.

