செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
5519d73d-bf38-4a83-8a58-cd897575b7ab
-

S$611 மி. மீட்டு மலேசியாவிடம்

ஒப்படைத்த அமெரிக்கா

கோலாலம்பூர்: 1எம்டிபி தொடர்பான சொத்துகளிலிருந்து மீட்கப்பட்ட 1.9 பில்லியன் ரிங்கிட்டை (611 மில்லியன் வெள்ளி) மலேசிய அரசிடம் அமெரிக்காவின் நீதித் துறை ஒப்படைத்துள்ளது. 2009க்கும் 2014க்கும் இடைப்பட்ட காலத்தில் 1எம்டிபியிலிருந்து பல்வேறு வழிகளில் குறைந்தது 4.5 பில்லியன் யுஎஸ் டாலர் திருடப்பட்டுள்ளதாக மலேசியா, அமெரிக்க புலனாய்வுத் துறையினர் கூறுகின்றனர்.

இந்த நிலையில் 1எம்டிபியின் பணத்தில் வாங்கிய சொத்துகளிலிருந்து மீட்ட பணத்தை அமெரிக்கா ஒப்படைத்துள்ளது.

மலேசியா, இந்நாள்வரை கைப்பற்றப்பட்ட அல்லது 1எம்டிபி வழியாக அனுப்பப்பட்ட 16.05 பில்லியன் ரிங்கிட்டை திரும்பப் பெற்றுள்ளது.

இந்தப் பணத்தைக் கொண்டு 1எம்டிபி மற்றும் அதன் முன்னைய துணை நிறுவனமான எஸ்ஆர்சியின் கடனை அடைக்கப்போவதாக மலேசியா கூறியுள்ளது.

1எம்டிபிக்கு 39.8 பில்லியன் ரிங்கிட் தீர்க்கப்படாத கடனும் எஸ்ஆர்சிக்கு 2.57 பில்லியன் ரிங்கிட் கடனும் உள்ளது என நிதி அமைச்சின் அறிக்கை தெரிவிக்கிறது.

சினோவாக் சக்தி வாய்ந்தது

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் சீனாவின் 'சினோவாக்' தடுப்பூசி போடப்பட்ட சுகாதார ஊழியர்களுக்கு மீண்டும் கிருமித்தொற்று ஏற்படவில்லை. இதனால் சினோவாக் ஆற்றலுடன் செயல்படுவதாக உண்மையாக நடைபெற்ற சோதனையில் தெரிய வந்துள்ளது.

ஜகார்த்தாவில் இரண்டு முறை 'சினோவாக்' தடுப்பூசி போட்டுக்கொண்ட 25,374 பேரை 28 நாட்கள் கண் காணித்ததில் நூறு விழுக்காட்டினரை மரணத்திலிருந்தும் 96 விழுக்காட்டினரை மருத்துவமனை சிகிச்சையிலிருந்தும் காப்பாற்றியுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

கொவிட்-19 விதிமீறல்; மன்னிப்பு

கேட்ட டாக்டர் மகாதீர்

கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மது, கொவிட்-19 விதிகளை மீறியதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார். அண்மையில் லங்காவியில் நடந்த அறப்பணி நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அவர் விதிமுறைகளை மீறியதாகக் கூறப்படுகிறது.

"மே 8ஆம் தேதி என்னுடைய தொகுதியில் நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தையொட்டி நடைபெற்ற பல்வேறு அறப்பணி நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். அப்போது ஒரு நிகழ்ச்சியில் உடல் வெப்பநிலை சோதிக்காமல் நான் நுழைந்துவிட்டதாக தெரிவித்தனர். இது தவறு. இந்தத் தவறு மீண்டும் நடக்கக் கூடாது. இதற்காக மன்னிப்புக் கேட்கிறேன்," என்று டாக்டர் மகாதீர் கூறியுள்ளார்.