காஸா, இஸ்ரேல் மோதலின் எதிரொலி
ஜெருசலம்: காஸாவில் இஸ்ரேல்ராணுவத்திற்கும் பாலஸ்தீன போராளிகளுக்கும் இடையிலான மோதலுக்கு மத்தியில் இஸ்ரேல் நகர வீதிகளில் புதிய கலவரங்கள் வெடித்துள்ளன.
காஸா மீது தொடர்ந்து ஏவு
கணைத் தாக்குதலில் ஈடுபட்டுள்ள இஸ்ரேல், 10 மூத்த ஹமாஸ் போராளிகள் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது.
திங்கட்கிழமை முதல் நடந்து வரும் தாக்குதல்களில் 16 பிள்ளைகள் உட்பட 67க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும் பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஹமாஸ் தரப்பில் இருந்து புதன்கிழமை இரவு சுமார் 1,000 ஏவு
கணைகள் வீசப்பட்டதாகவும் அவற்றில் பல ஏவுகணை தற்காப்பு முறை மூலம் தடுக்கப்பட்டதாகவும் இஸ்ரேலிய ராணுவத் தரப்பு கூறியது. அத்தரப்பில் ஐந்து வயது சிறுவன், ஒரு வீரர் உட்பட ஆறு இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
இதன் எதிரொலியாக, பல இஸ்ரேலிய நகரங்களில் யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையில் கும்பல் வன்முறை வெடித்ததால், அங்கு கலவரங்கள் மூண்டன.
டெல் அவிவ்வில் உள்ள பட் யாம் பகுதியில் நடந்த கலவரத்தின்போது பல யூதர்கள் ஒன்று சேர்ந்து, அரேபிய ஓட்டுநர் ஒருவரை மாறி மாறி அடித்தனர். அந்த ஓட்டுநர் அசைவற்று தரையில் விழுந்து கிடந்தபோதும் அவர்கள் விடாமல் தாக்கினர்.
கார்கள், கடைகள், அலுவலகங்கள், உணவகங்கள் மீதும் யூத, அரேபிய வன்முறைக் கும்பல்கள் தாக்குதல் நடத்தின.
மத்திய இஸ்ரேலில் உள்ள லோட் நகரம் முடக்கப்பட்டதாகவும் வன்முறையில் ஈடுபட்ட 280 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
"இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலைத் தீர்க்க முடியாவிடில், அது இஸ்ரேலில் உள்நாட்டு வன்முறை, அமைதியின்மைக்கு வழிவகுக்கும் என்று பல ஆண்டுகளாக எச்சரிக்கப்பட்டு வருவதாக," முன்னாள் மூத்த அமைச்சரும் பாலஸ்தீனர்
களுடனான சமாதான பேச்சுவார்த்தைக்கான முன்னாள் தலைவருமான செல்வி சிபி லிவ்னி கூறினார்.
இதற்கிடையே, இஸ்ரேல் மற்றும் காஸாவில் வன்முறை அதிகரிப்பதால் பொதுமக்கள் உயிரிழப்பது குறித்து மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாகவும் அனைத்துத் தரப்பினரும் பொதுமக்கள் வசிப்பிடங்கள் மீதான தாக்குதல்களை நிறுத்தவும் சிங்கப்பூர் அழைப்பு விடுத்து
உள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குத் தக்க பதில் தாக்குதல் நடத்தப்படும் என்று அதன் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு கூறியுள்ளார்.

